James Vasanthan: பாட்டில் மெல்லிசை.. கருத்தில் பூகம்பம்.. கோலிவுட்டின் வெளிச்சத்திற்கு வராதா டி.ஆர்.! யார் இவர்?
Oct 01, 2024, 07:34 AM IST
James Vasanthan: கோலிவுட்டில், நடிகர், இயக்குநர், கதை ஆசிரியர், இசையமப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்திரன் போன்ற நபர் அதிக புகழ் வெளிச்சத்திற்கு வரமாலே போயுள்ளார். அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கோலிவுட்டின் இன்றைய சூழலில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் மட்டும் ஒருவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதேசமயம், சினிமாவில் நிலைத்து நிற்க ஒருவர் அவரது பன்முகத் தன்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது.
அப்படி, தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் டி.ராஜேந்திரன் காரணம் ஒரு படத்திற்கு அவரே கதாநாயகன், அவரே இயக்குவர், அவரே, வசனம், அவரே கதை ஆசிரியர், அவரே இசையும் அமைப்பார் என்றால் எப்படித்தான் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கும். சினிமாவில் தனது பன்முகத் தன்மையால் இன்று நிரூபிப்பவர்கள் எல்லாமே டி.ஆரின் பெயரால் குறிப்பிடப்படுபவர்கள் தான்.
அப்படி, டி.ஆருக்கு இணையாக பன்முகத் தன்மை கொண்டிருந்தும் பெரிதாக கண்டுகொள்ளப் படாதவர் தான் ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தன்
இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகும் முன்னே, நிகழ்ச்சி தொகுப்பாளராக பலருக்கும் பரிட்சையம் ஆகியிருந்தார். சன் டிவி, மக்கள் டிவி, விஜய் டிவி என இவர் வரிசையாக பணியாற்றி 90'ஸ் கிட்களின் மனதில் பதிந்த நபராக மாறினார்.
தமிழ் மொழி பற்றாளரான இவர், விஜய் டிவியில் நடத்திய 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற நிகழ்ச்சியை பார்க்காத இளைஞர்களே இருக்க முடியாது. அநேத நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில் இன்றும் அந்த நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஜேம்ஸ் வசந்தன், ஆரம்ப காலகட்டத்தில் முதுகலை ஆங்கிலம் பயின்று வந்தார். பின் இசை மேல் இருந்த காதலால், சென்னைப் பல்கலைக் கழகதத்தில் கர்நாடக இசையையும், லண்டன் டிரினிட்டி கல்லூரியில் மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார்.
பின், ஹோட்டலில் உணவக இசைக் கலைஞராகவும், கிருத்துவ பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின் சென்னை திரும்பிய இவர் ஏராளமான கிருத்துவப் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் இவருக்கு திரைப்படங்களில் இசை அமைக்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கத் தொடங்கியது.
சுப்ரமணியபுரத்தின் தாக்கம்
இதையடுத்து, தனது தீவிர முயற்சியால் 2008ம் ஆண்டு நடிகர் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்ட அவர், அந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் காதல், சோகம், துள்ளல் என வாரி வழங்கி இருப்பார். 'கண்கள் இரண்டால்', 'மதுரகுலுங்க', 'காதல் சிலுவை' என ஒவ்வொறு பாடலும் ஒவ்வொரு ரகம். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்ததுடன் இந்த ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதைகள் பலவற்றை தட்டிச் சென்றார்.
அடுத்தடுத்த படங்கள்
இந்த மெஹா ஹிட் படத்திற்கு பின், அதிகளவு தனக்கு வாய்ப்பு வரும் என எண்ணியவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு அவருக்கு பசங்க, ஈசன், நாணயம் என்ற தமிழ் படங்களும், டபுள் என்ற மலையாள திரைப்படமும் மட்டுமே கிடைத்தது. பின்னர் சமீபத்தில் வெளியான அரியவன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இசை அமைத்திருந்தார்.
சுப்ரமணியபுரம் தவிர, அன்பாலே அழகாகும் வீடு, ஒரு வெட்கம் வருதே வருதே, நான் போகிறேன் மேலே மேலே போன்ற பாடல்கள் இன்றும் மெலடி விரும்பிகளின் ப்ளே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
கோலிவுட் இயக்குநர்
ஆனால், இந்தப் படங்களைத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காலகட்டத்தில் தான் ஜேம்ஸ் வசந்தன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ஓ அந்த நாட்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், அவர் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார். அதேசமயம் இவர், மொழி, இசை, கிருத்துவ மதம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
இளையராஜா- வைரமுத்து பஞ்சாயத்து
முன்னதாக, இளையராஜா- வைரமுத்து விவகாரத்தில் அவர் தலையிட்டு காட்டமான கருத்துகளை முன் வைத்தார். ஒரு பாடலில் இசை பெரியதா அல்ல மொழி பெரியதா என்ற கருத்துகளை வைரமுத்து பேசப் போய் அது பெரும் பிரச்சனயாக வந்தது. அந்த சமயத்தில் தான் இளையராஜா அவரது பாடல்களை பயன்படுத்துவோர் முறையாக அனுமதி பெற்று, தனது பாடல்களை பயன்படுத்த வேண்டும் அதற்காக தனக்கு பணம் அளிக்க வேண்டும் எனக் கூறி வந்தார்.
இந்தக் கருத்துகளால் கொதித்துப் போன ஜேம்ஸ் வசந்தன். மொழியும் இசையும் சேர்ந்ததே பாடல். இது மொழிக்கும் இசைக்கும் நடக்கும் பிரச்சனை அல்ல. இது இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு பாடலுக்கு முகவரியாக அமைவது மொழி என்று தான் லைரமுத்து கூற முற்பட்டார். அவர் எந்த இளையராஜாவை தாக்கிப் பேசவில்லை என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருந்தார்.
மேலும், வைரமுத்துவுக்கு நாங்கள் வாய்ப்பு தரவில்லை எனில் அவர் பாடலாசிரியர் ஆகியிருக்கவே முடியாது என கங்கை அமரன் கூறியதற்கு தனது காட்டமான பதிலையும் அளித்தார். அதில், பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்தில் இசையமைக்க இளையராஜாவிற்கு வாய்ப்பளிக்கவில்லை எனில் இளையராஜாவும் இசசையமைப்பாளர் ஆகியிருக்க முடியாதா? திறமை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படும் அதனை ரசிக்க வேண்டுமே தவிர சொந்தம் கொண்டாடடக் கூடாது என கருத்து தெரிவித்தார்.
மொழி காதலன்
மேலும், இசை மற்றும் அதன் விருதுகள் பொதுவானதாகவும், அதை ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது என பிரித்து வைப்பது கூடாது எனவும் கூறி வந்த அவர், தமிழ் ஓசை - இயற்றமிழ் இசைத் தமிழில் என்ற பெயரில் சங்க காலத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த சங்க காலப் பாடல்கலை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையையும் அவர் இசை நிகழ்ச்சிகள் வாயிலாக செய்து வருகிறார்.
கிருத்துவ போதகர்களுடன் விவாதம்
தமிழ் மொழி மற்றும் இசைப் பற்றாளராக அறியப்பட்ட இவர், கிருத்துவ மத போதகர்களையும் விமர்சித்து வருகிறார். கிருத்துவ மக்களின் ஆண்டவரையும், கிருத்துவ மக்களின் நம்பிக்கையையும் பயன்படுத்தி சிலர் காசு பார்க்கின்றனர். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு தெரியும். கிருத்துவ மதத்தில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் கூறி அவர்கள் போதனைகள் நடத்தினால் போதும். பொய் சாட்சியங்களை பரப்பி, கிருத்துவ மதத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என தனது மத உணர்வுகளுக்காகவும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.
சினிமாவில் மெல்லிசையால் மக்கள் தன் வசம் இழுத்த ஒருவர், பளீர் பளீர் என்ற கருத்துகளால் சில நேரங்களில் பூகம்பத்தையும் ஏற்படுத்துகிறார். தமிழ் சினிமாவில் பெரும் புகழை அடையாவிட்டாலும், தனக்கு வாய்ப்பு கிடைத்த அனைத்து இடத்திலும் தன்னை நிரூபித்து சென்ற கலைஞன் ஜேம்ஸ் வசந்தனுக்கு இன்று (அக்டோபர் 1) பிறந்த நாள். இந்த நாளில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.