HBD Yuvan Shankar Raja: முதல் டீன் ஏஜ் இசையமைப்பாளர்..பிஜிஎம் கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா?
HBD Yuvan Shankar Raja: முதல் டீன் ஏஜ் இசையமைப்பாளர், ரசிகர்களால் பிஜிஎம் கிங், யங் மேஸ்ட்ரோ என கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் கம்போசிங் செய்த முதல் பாடல் என்ன என்பதை பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. லிட்டில் மேஸ்ட்ரோ, யங் மேஸ்ட்ரோ, பிஜிஎம் கிங் என பல பெயரால் ரசிகர்களை இவரை செல்லமாக அழைக்கிறார்கள்.
1996இல் தமிழில் வெளியான அரவிந்தன் படத்தில் தொடங்கி தற்போது வரை 170க்கும் மேற்பட்ட படங்களில் இவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடா, இந்தி மொழிகளில் இசையமைத்துள்ள இவர் பாடல்கள் பெரும்பாலானவை 2கே ஆரம்பகட்டத்தில் இளைஞர்களின் மனதை ரீங்காரமாய் ஒலித்த பாடல்களாக அமைந்தன.
தமிழ் சினிமாவில் முதல் டீன் ஏஜ் இசையமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானபோது அவருக்கு வயது 16. சரியாக சொல்வதென்றால் பள்ளி படிக்கும் டீன் ஏஜ் மாணவனாக இருந்தபோது இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். முதல் படத்திலேயே அற்புதமான ஹிட் பாடல்களை கொடுத்திருந்த போதிலும், யுவனை இசையை திரும்பி பார்க்க வைத்த படமாக சூர்யா - ஜோதிகா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் இருந்தது. இந்த படத்தில் இடம்பிடித்த பாடல்கள் எல்லாம் இன்றளவும் யுவனின் பெஸ்ட் ஆல்பம் லிஸ்டில் ஒலித்துகொண்டிருக்கின்றன.
யுவன் முதல் கம்போசிங்
யுவன் சங்கர் ராஜா வாசித்த சில ட்யூன்களால் ஈர்க்கப்பட்டு அவருக்கு அரவிந்தன் ட்ரெய்லர் மியூசிக்கை வாய்ப்பை வழங்கியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா. பின்னர் அதிலும் இம்ரஸ் ஆகி அந்த படத்தின் இசையமைப்பாளராகவும் வாய்ப்பை வழங்கினார்.
அப்படி வாய்ப்பை பெற்ற யுவன் சங்கர் ராஜா முதலில் இசையமைத்த பாடல் சரத்குமார் - ஊர்வசி நடித்த மாண்டேஜ் ஷாட்களாக வரும் அற்புத மெலடியான ஈரநிலா என்ற பாடல் தான். இதுதான் அவரது கம்போசிங் செய்த முதல் பாடலாக உள்ளது.
இந்த படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் யுவன் பெற்ற செல்வாக்கு பற்றி தனியாக சொல்லி தெரியவேண்டியதில்லை.
யுவனின் சக்ஸஸ் காம்போக்கள்
தமிழ் சினிமாவில் ஹிட் பார்முலாவாக ஹீரோ - டைரடக்டர் என இருந்து வந்த காம்போவை போல், இசையமைப்பாளர் - ஹீரோ, இசையமைப்பாளர் - டைரக்டர், இசையமைப்பாளர் - பாடலாசிரியர் என்ற காம்போவை உருவாக்கி ஹிட் பாடல்கள் கொடுத்த ட்ரெண்டை உருவாக்கிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான்.
சில ஹீரோக்கள், சில இயக்குநர்களுடன் யுவன் காம்போ அமைத்தால் அது நிச்சயம் சக்சஸ் தான் என்ற நிகழ்வு தொடர்கதையாக நடந்தது. அந்த வகையில் யுவனின் பேவரிட் டைரக்டர்களாக செல்வராகவன், விஷ்ணுவர்தன், அமீர், லிங்குசாமி, ராம் என லிஸ்டை பெரிதாக சொல்லலாம். அதைபோல் யுவன் - அஜித், யுவன் - சிம்பு, யுவன் - தனுஷ், சூர்யா, விஷால் என என ஹீரோக்களின் லிஸ்டும் அதிகமாகவே இருக்கின்றன. பாடலாசியர்களின் மறைந்த நா. முத்துக்குமார் பாடலுக்கு தனது அற்புத இசையால் உயர் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.
பாடகராகவும் கலக்கும் யுவன்
இசையமைப்பாளராக பல்வேறு ஜானர்களில் விதவிதமான பாடல்களை கொடுத்திருக்கும் இவர், பாடகராகவும் பல ஹிட் பாடல்களை பாடி முணுமுணுக்க வைத்துள்ளார்.
தனது இசையில் மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல் பாடியுள்ளார். சினிமா தவிர இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா சில படங்களில் கேமியே காட்சிகளிலும் தோன்ற ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பிலிம் பேர் விருதுகள், தமிழ்நாடு அரசின் விருதுகள் வென்றுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் தி கோட் படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
90ஸ் கிட்ஸ்களின் இன்பம், துன்பம், சோகம், தியாகம், கனவு, சாதனை என அனைத்து விதமான உணர்ச்சிகளிலும் தனது இசையின் மூலம் இரண்டறக் கலந்தவராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்