Vairamuthu: 36 வருஷமாச்சு... கொடுத்த வார்த்தைய நிறைவேத்த இன்னும் மனசு வரல... விளக்கம் தந்த வைரமுத்து
Vairamuthu: நடிகர் ரஜினி காந்த்திற்கு தான் 36 வருடங்களுக்கு முன் ஒரு வாக்குறுதி அளித்ததாகவும் அதை நிறைவேற்ற தற்போது வரை மனது வரவில்லை எனவும் இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டேன் எனவும் பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.
சமீப காலங்களாக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. அதனை அவர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பினும் அவ்வப்போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அதேசமயம், அவர் கடந்த சில நாட்களாக தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை, மறக்க முடியாத சில நிகழ்வுகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று கொடி பறக்குது படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தனக்கும் நடிகர் ரஜினி காந்த்திற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்தும், அந்த சமயத்தில் ரஜினி காந்த்திற்கு அளித்த வாக்குறுதி குறித்தும் அதை தற்போதுவரை நிறைவேற்றாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.
ரஜினிக்கு வாக்கு
அந்தப் பதிவில், ரஜினிகாந்த் தன்னை வைத்து படம் தயாரிக்குமாறு கேட்டார். அப்போது, எனக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் முதலில் உங்களைத் தான் அணுகுவேன் என்றும் கூறினேன். ஆனால் அதனை நிறைவேற்ற மனம் வரவில்லை. இனியும் வராது. அப்படி செய்தால் நட்டில் உள்ள புனிதம் கெட்டு விடும் எனக் கூறி தனக்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
ஹிட் அரசன்
1980ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிகழ்கள் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. இவரது முதல் பாடலான இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடல் வெளியான நாள் முதல் இன்றுவரை பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது. முதல் பாடலே ஹிட் அடித்த நிலையில், பல்வேறு படங்களுக்கு பாடல்களை எழுதி கண்ணதாசன், வாலி போன்ற மாபெரும் கலைஞர்களை ஓரம்கட்டி தமிழ் சினிமாவில் கவிப் பேரரசாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
80களில் வெளியான தமிழ் சினிமாவில் இவரது பாடல்களே பட்டி தொட்டி எங்கும் பரவியது. அதுவும் இளையராஜா- வைரமுத்து கூட்டணி என்றால் அதற்கு தனி மவுசு தான்.
பின்னர், ஹீரோக்களுக்கான மாஸ் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதலும் காமமும் சொட்டும் பாடல்கள் என இவரது ரசனையும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின.
80களில் ஆரம்பித்த இவரது கலைப்பயணம் இப்போது வரை நீண்டு கொண்டு தான் இருக்கிறது. இவரின் இரண்டு மகன்களான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் தற்போது சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.
பாட்ஷா பாடல் சம்பளம்
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் தான் பாட்ஷா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்தும், இதற்காக தயாரிப்பாளர் வீரப்பன் உடன் நடந்த உரையாடல் குறித்தும் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த விஷயம் அடங்கிய நிலையில், தற்போது தான் நடிகர் ரஜினி காந்த்திற்கு அளித்த வாக்குறுதி குறித்து கூறியுள்ளார் வைரமுத்து.
கொடி பறக்குது
அந்தப் பதிவில், ‘கொடிபறக்குது’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ பாடலை எழுதி எடுத்துக்கொண்டு பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருந்தேன். ரஜினியை ஒப்பனையில் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்தேன். படப்பிடிப்புத் தளங்களில் பார்க்கமுடியாத என்னைப் பார்த்ததும் ரஜினி தன் உடல்மொழியில்ஆச்சரியம் காட்டினார்.
காட்சிகளின் இடைவெளியில் அவரும் நானும் தனியானோம். என் தோளில் கைபோட்டுக் கொண்டே ஓர் ஓரமாய்ப் பொடிநடை போனார். உறுதியான சொற்களில் என்னைப் பார்த்துச் சொன்னார்:
“இளையராஜாவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டேன்; பாரதிராஜாவுக்கு இந்தப்படம் நடித்துக்கொண்டிருக்கிறேன்; அடுத்து நீங்கள்தான். எப்போது என்னை வைத்துப் படம் செய்யப் போகிறீர்கள்; நான் தயார்” என்றார்.
தழதழுத்தேன்
ஒன்றும் பேசாமல் நின்றேன். சில கணங்கள் சென்றபிறகு மீண்டும் தன்னிலை அடைந்தேன். “மிக்க நன்றி. இப்படிக் கேட்பதற்கே பேருள்ளம் வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நான் உங்களைத்தான் அணுகுவேன்”. அவர் கைகளைப் பற்றிக்கொண்டு தழுதழுத்தேன்.
கணிதம் புனிதத்தை கெடுக்கும்
இன்றுவரை அந்த வாக்குறுதி அப்படியே இருக்கிறது. அவரும் அதை மறந்திருக்க மாட்டார். ஆண்டு பலவாக அந்த வார்த்தைகளை நான் அசைபோட்டே வந்திருக்கிறேன். நண்பர்களாய் இருப்பது
புனிதமானது; வியாபாரிகளாய் இருப்பது கணிதமானது. கணிதம் புனிதத்தைக் கெடுத்துவிடும்; கெடவிடமாட்டேன். அதனால், இப்போது மட்டுமல்ல எப்போதும் கேட்கமாட்டேன் என கூறியிருக்கிறார்.
தங்களது புனிதமான நட்பை படம் தயாரித்து வியாபாரத்தில் உள் நுழைத்து கெடுக்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே, ரஜினி காந்த்திற்கு அளித்த வாக்குறுதி குறித்து தற்போது வரை மௌனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.