Ponmudy Case: “குற்றவாளி இல்லை என தீர்ப்பு இல்லை!” பொன்முடிக்கு அமைச்சர் பதவிபிரமாணம் செய்து வைக்க இயலாது - ஆளுநர் ரவி
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என்று அவரை அமைச்சரவையில் இணைத்து கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கைக்கு ஆளுநர் ரவி பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்ப்பு பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து பொன்முடி எம்எல்ஏவாக மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை அமைச்சரவையில் இணைத்து கொள்ள பதவிப்பிராமணம் செய்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆளுநர் மறுப்பு
இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஆளுநர் ரவி, அங்கு சட்ட வல்லுநர்களிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பொன்முடிக்கு எதிரான வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தாா்.
இதன் மூலம், பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்துக்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாா்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி சாா்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பொன்முடி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார் பொன்முடி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உத்தரவு வந்த பிறகு அவரது எம்எல்ஏ பதவி பறிபோனதுடன், திருக்கோவிலூர் தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அவரது தண்டனை நிறுத்த வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைத்த நிலையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரப்பட்ட நிலையில், ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.