RCB vs CSK Result: கோலி ஆனந்த கண்ணீர்!பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி - ப்ளேஆஃப்புக்கு தகுதி
RCB vs CSK Result: கடைசி ஓவரில் சிஎஸ்கே தகுதி பெற 17 ரன்கள் தேவை என்று இருக்க 7 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் 2024 தொடரின் 68வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறும் என்று இருந்த நிலையில், இதுவொரு நாக்அவுட் போட்டியாகவே அமைந்திருந்தது. அத்துடன் இரு அணிகளுக்கும் இந்த சீசனின் கடைசி போட்டியாகவும் இருந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஆர்சிபி 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சிஎஸ்கே 13 போட்டிகளில் 7 வெற்றியுடன், நான்காவது இடத்திலும் இருந்து வந்தன.
இந்த சீசனின் முதல் போட்டியே சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
ஆர்சிபி அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் அடித்துள்ளது.
அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 54, விராட் கோலி 47, ராஜத் பட்டிதார் 41, கேம்ரூன் க்ரீன் 38 ரன்கள் அடித்துள்ளனர். சிஎஸ்கே பவுலர்களில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
சிஎஸ்கே சேஸிங்
சிஎஸ்கேவுக்கு இலக்கு 219 ரன்கள் என இருந்தபோதிலும், 201 ரன்கள் எடுத்தால் ப்ளேஆஃப் தகுதியை பெறலாம் என்கிற நிலையில் களமிறங்கியது. இதையடுத்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 61, ரவீந்திர ஜடேஜா 42, அஜிங்கியா ரகானே 33, தோனி 25 ரன்கள் எடுத்தனர். இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி ரன் ரேட் அடிப்படையில் ப்ளேஆஃப் சுற்றில் நான்காவது அணியாக நுழைந்தது. வெற்றிக்கு பின்னர் ஆர்சிபி வீரர்களோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விராட் கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார்.
ஆர்சிபி பவுலர்களில் யஷ் தயாள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல், லாக்கி பெர்குசன், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்ற அணிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் அணி ஏற்கனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் சவாலை எதிர்கொண்டு, சிஎஸ்கேவை வீழ்த்தி நான்காவது அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை பெற்றது.
ஐபிஎல் 2022 சீசனுக்கு பிறகு சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் இல்லாத ப்ளேஆஃப் இரண்டாவது முறையாக நடைபெற இருக்கிறது.
முன்னதாக, முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்ற ஆர்சிபி, அடுத்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.