RCB vs CSK Preview: தோனி - கோலி இடையே ப்ளேஆஃப் யுத்தம்! பேட்டிங், பவுலிங்கில் ஆர்சிபிக்கு காத்திருக்கும் சவால்
RCB vs CSK Preview: தோனி - கோலி இடையே ப்ளேஆஃப் யுத்தமாக இந்த போட்டி அமைந்துள்ளது. மழை குறுக்கீடுக்கான வாய்ப்பு 70 சதவீதம் வரை இருக்கும் என கூறப்படும் நிலையில், பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஆர்சிபிக்கு சவால் காத்திருக்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 68வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால் இதுவொரு நாக்அவுட் போட்டியாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இந்த சீசனின் கடைசி போட்டியாக இன்றைய போட்டி அமைகிறது. இருப்பினும் இந்த சீசனில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாகவும், முக்கியமான போட்டியாகவும் உள்ளது. தற்போதையை நிலையில் ஆர்சிபி 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சிஎஸ்கே 13 போட்டிகளில் 7 வெற்றியுடன், நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த சீசனின் முதல் போட்டியே சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆர்சிபி இருக்கும்.
ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு
ப்ளேஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருக்கும் நிலையில், நான்காவது இடத்துக்கான போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறும். ஆனால் அதிலும் சில கண்டிஷன்கள் அப்ளை செய்யப்பட்டுள்ளன.
ஆர்சிபிக்கு காத்திருக்கும் சவால்
இந்த போட்டியில் வெற்றியை பெறுவதோடு மட்டுமில்லாமல் முதல் பேட்டிங் செய்தால் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்திலும், சேஸிங் செய்தால் 18.1 ஓவரில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும் ஆர்சிபி அணிக்கு உள்ளது. இதை செய்தால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கேவை வீழ்த்தி டாப் 4 இடங்களுக்கு ஆர்சிபியால் முன்னேற முடியும். எனவே ஆர்சிபி அணிக்கு பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சவால் காத்திருக்கிறது.
வழிவிடுவாரா வருண பகவான்
பெங்களுருவில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும்பட்சத்தில் சிஎஸ்கே ப்ளேஆஃப் வாய்ப்பை எளிதல் பெற்றுவிடும். எனவே இன்றைய போட்டியில் மழை பாதிப்பு இருக்ககூடாது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிட்ச் நிலவரம்
பொதுவாகவே பெங்களுரு சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த சீசன் முழுவதிலும் பவுலர்களை காட்டிலும், பேட்ஸ்மேன்களை அங்கு ஜொலித்துள்ளார்கள். இந்த போட்டியில் அதிகம் புற்கள் இல்லாத மைதானத்தில் மத்தியில் இருக்கும் பிட்ச் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே பேட்ஸ்மேன், பவுலர்கள் என இருவருக்கும் உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களுருவில் இன்று 70 சதவீதம் வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டி மழையால் குறுக்கீடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
சிஎஸ்கே - ஆர்சிபி இதுவரை
இந்த இருஅணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 21, ஆர்சிபி 10, ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்த போட்டி தோனி - கோலி இடையிலான யுத்தமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் அடித்த வீரராக கோலி உள்ளார். அதேபோல் தோனி சின்னசாமி மைதானத்தில் மட்டும் 413 ரன்களை குவித்திருப்பதோடு, 82 சராசரி வைத்துள்ளார்.
ஒரு வேளை இது தோனியின் கடைசி சீசனாக இருந்தால் தோனி - கோலி மோதிக்கொள்ளும் கடைசி போட்டியாக இது அமையக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.