Seeman vs Vijayalakshmi: சீமான் தொடர்ந்த வழக்கு..நடிகை விஜயலட்சுமிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் வரும் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் சீமான் மனுவில் கூறியிருந்தார்.
கடந்த முறை வழக்கு நடைபெற்ற விசாரணையின்போது, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். இதனால் வரும் 19ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, என் வாழ்க்கையை சீரழித்தார். இதுதான் எனது கடைசி வீடியோ. இரண்டுநாள் கழித்து நான் எப்படி இறந்தேன் என்று கர்நாடகாவில் இருந்து தெரிவிப்பார்கள்.
நான் எனது உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன். எனது மரணம், சீமான் யார், நாம் தமிழர் கட்சின்னா என்ன என்பதை புரிய வைத்து விடும். அதன்பிறகு, ஒருவர் தமிழகத்துக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்." என்று அதில் பேசியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்