Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Kathiravan V HT Tamil
May 04, 2024 07:01 PM IST

“இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்”

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ட்வீட்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ட்வீட்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

திரு. ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார். 

சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமார் தன்சிங்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தன்சிங் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.