RR vs KKR Preview: ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டி! கொல்கத்தா ப்ளேஆஃப்புக்கு முன்னர் பயிற்சி ஆட்டம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rr Vs Kkr Preview: ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டி! கொல்கத்தா ப்ளேஆஃப்புக்கு முன்னர் பயிற்சி ஆட்டம்

RR vs KKR Preview: ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டி! கொல்கத்தா ப்ளேஆஃப்புக்கு முன்னர் பயிற்சி ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 19, 2024 07:15 AM IST

RR vs KKR Preview: ப்ளேஆஃப்புக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சி போட்டி போல் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தாலும், ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டியாக உள்ளது. எனவே நான்கு தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்று புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபடும்.

ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டி
ராஜஸ்தானுக்கு இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 போட்டிகளில் 9 வெற்றி, 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் 8 வெற்றி, 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நான்கு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கு நேர் மாறாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது கடைசி 5 ஆட்டத்தில் நான்கு தொடர் வெறறிகளை சந்தித்துள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் மோதலில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே அந்த தோல்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பழி தீர்க்க முயற்சிக்கும்.

அதேசமயம் கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை தழுவி, இந்த போட்டிக்கு முன்னர் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றால் அந்த அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது இடத்துக்கு சென்று ஆர்சிபிக்கு எதிராக எலிமினேட்டர் விளையாடும் சூழல் ஏற்படும். எனவே அதை தவிர்க்கவும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ராஜஸ்தான் ராயல்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா அணியின் இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஓபனர் பில் சால்ட் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்ல குர்பாஸ் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய டாம் கோஹ்லர்-காட்மோர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் நிலவரம்

போட்டி நடைபெறும் கவுகாத்தில் இந்த சீசனில் இரண்டாவது ஆட்டம் நடக்கவுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நன்கு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.

கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோராக 223 ரன்களும் இருக்கின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ப்ளேஆஃப்புக்கு முன்னர் இதுவொரு பயிற்சி போட்டி போல் அமைந்திருந்தாலும், ராஜஸ்தான் ராயல் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது. எனவே அணியில் பெரிய மாற்றங்களையும், புதிய முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெற்றி கூட்டணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.