Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!
”முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் புகார் அளித்ததாக கூறப்படுகிறது”
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல் விடுத்தேனா? - ரூபி மனோகரன் விளக்கம்!
இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் கூட்டணிகாக கடுமையாக உழைத்தவர், பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்தோம். அவரது இழப்பு எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு என கூறினார்
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது புகார் உள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அதில் உண்மை உள்ளதாக எனக்கு தெரியவில்லை. என் மீது வேண்டுமென்றே பழி போட வேண்டும் என்று யாரோ பின் புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்கு தோன்றுகிறது. காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.
எனது தரப்பில் எதுவுமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடுகளுமே கிடையாது. நாங்கள் அண்ணன், தம்பி போல இருந்தோம்.
இந்த மரணம் தொடர்பாக என் மீது உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது. காவல்துறையின் எந்த விசாரணைக்கும் நான் ஒத்துழைப்பு தருவேன்,
எனக்கும் ஜெயக்குமாருக்கும் வரவு செலவு நடந்தது இல்லை. நாங்கள் அண்ணன், தம்பி போல்தான் பழகினோமே தவிர கடைசி வரை நண்பர்களாக இருந்தோம்.
இதன் பின்புலத்தில் யாரோ செயல்படுவதாக தெரிகிறதே தவிர, யார் என்று தெரியவில்லை. எனக்கு வேண்டாதவர்கள் என் மீது குற்றம் சுமத்தலாம்.
நான் நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்படுவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவருடைய இறுதிச்சடங்கிற்கு நான் செல்கிறேன் என கூறினார்.
எங்கள் தலைமை இதை சும்மாவிட்டாது! செல்வப்பெருந்தகை!
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், எங்கள் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் புகாரை ஏற்று நேர்மையான முறையில் விசாரணை நடத்த காவல்துறையிடம் கோரி உள்ளோம். பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு எடுக்க சொல்லி உள்ளோம்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே இந்த மரணம் எப்படி நடந்து என்பது தெரியவரும். அவரது மரணத்தில் எழும் சந்தேகங்களுக்கு காவல்துறை நேர்மையான விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். யார் தவறு செய்து இருந்தாலும், சட்டம்தனது கடமையை செய்யும். கட்சி ரீதியாகவும் எங்கள் விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம்.
மாவட்ட தலைவர் காணாமல் போனது குறித்து இன்று காலைதான் எனக்கு தெரியும். உடனே அவர்கள் வீட்டில் இருப்பவர்கள், அவரது கடிதத்தை கொடுத்தார்கள். காவல்துறை அதிகாரிகளிடம் பேசும்போது விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.