தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Let's Remember Singer Sirkazhi Govindarajan Today On His Memorial Day

தனித்துவமாக ஓங்கி ஒலிக்கும் குரல்.." உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" சீர்காழி கோவிந்தராஜன் நினைவுநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Mar 24, 2024 05:45 AM IST

Sirkazhi Govindarajan memorial day : தலைமுறை கடந்தும் தனது குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகர் சீர்காழி கோவிந்தராஜன். உடலால் உலகை விட்டு மறைந்தாலும் தனது குரலால் இன்னும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டேயிருப்பார். அவரின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்
பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்ட இவர் தன் தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத்தில் பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார். அந்த காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர்களான தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களை ஒரு முறை கேட்டால் அப்படியே பாடிவிடுவார்.

இவர் தனது முதல் பாடலை தனது எட்டு வயதில் திரிபுரசுந்தரி கோயிலில் பாடினார். இவர் தனது சிறு வயதிலேயே தியாகராஜ பாகவதர் பாடல்கள், கிட்டப்பா பாடல்கள், பக்தி கீர்த்தனை பாடல்களை ரசித்து ஆர்வத்தோடு பாடி வந்தார். நாடக சபையில் சேர்ந்த இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவரது தந்தை பழனியில் உள்ள தாய்மாமா பி.எல். செட்டியாரிடம் அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து துணை நடிகராக நடிக்கும் போது இசையமைப்பாளர் ராமநாதன் தொடர்பு ஏற்பட்டது. அவரின் ஆலோசனை படி இசை ஆர்வம் மிகுதியால் சென்னை இசைக்கல்லூரியில் பயின்றார். 1949 ல் இசை மணி பட்டம் பெற்றவர். சுவாமிநாத பிள்ளையிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். இவரை தனது குருவாக ஏற்று கொண்டார். இவரது ஆலோசனை படி இசையில் மேற்கொண்டு படித்து சங்கீதவித்வான் பட்டமும் பெற்றார்.

இவர் நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் தேவி நாடகசபா, பாய்ஸ் நாடக கம்பெனிகளில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. இவருக்கு தனது 20ஆவது வயதில் தான் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் பாடும் வாய்ப்பு அப்போது தான் அவருக்கு கிடைத்தது. சாஸ்திர சங்கீதம் படித்து விட்டு சினிமாவில் பாட தயங்கினார். தனது குரு சுவாமி நாதபிள்ளையிடம் தனது தயக்கத்தையும் குழப்பத்தையும் தெரிவித்தார். அவரோ சினிமாவில் பாடுவதால் நிறைய பேருக்கு நல்ல கருத்துக்களை பகிர வாய்ப்பு உள்ளதால் பாடச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.

இவ்வாறு தான் திரைத்துறையில் 1953 ல் ஜெமினி ஸ்டுடியோவுக்காக ஔவையார் படத்தில் ஆத்திச்சூடியும், சிரிப்புத்தான் வருகுதய்யா என்ற பாடலை பொன்வயல் படத்துக்காகவும் பாடினார். இதற்கு அடுத்த படியாக ரம்பையின் காதல் என்ற படத்தில் இவர் பாடிய "நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற பாடல் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது.

சீர்காழி கோவிந்தராஜன் சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல் பக்தி பாடல்களை தனது கட்டி இழுக்கும் குரலால் பாடிஉள்ளார். விநாயகப் பெருமானை போற்றும் வகையில் இவர் பாடிய பக்தி பாடலை கேட்டு தினந்தோறும் காலையில் எழுவோர் ஆயிரக்கணக்கானோர் இன்னும் இருக்க தான் செய்கின்றனர். இவருக்காகவே பலநூறு பக்திப் பாடல்களை எழுதியுள்ளார் சண்முகம்.

இவர் பாடகர் மட்டுல் இல்லை நடிகரும் கூட. ஏ.பி. நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை படத்தில் நடித்தார். இவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படத்தோடு மூடியும் விட்டார். 1957ல் ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளியான சக்ரவர்த்தி திருமகள் என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் பாடிய போது திரைப்பட உலகின் மொத்த கவணத்தையும் தன் வசம் ஈர்த்தார். எம்.ஜி. ஆர். தயாரித்த நாடோடி மன்னன் படம் உட்பட எம்.ஜி.ஆருக்காக பாடிய காதல், தத்துவம், கொள்கை என்று பல பாடல்களை பாடியுள்ளார். சுலோசனா அவர்களை மணந்தார். இவரது மகன் சிவ. சிதம்பரமும் பாடகராக உள்ளார்.

தமிழ் இசையின் ஜாம்பவான்களாக 1960-75 காலத்தில் டி.எம்.எஸ். சீர்காழியார் இணைந்து பாடிய பாடல்களும், போட்டி பாடல்களும் பிரசித்தம். இவர் எவரோடு இணைந்து பாடும் போதும் சீர்காழியார் குரல் தனித்துவமாக ஓங்கி ஒலிக்கும்.

மக்கள் திலகத்துக்கு பாடியது போலவே நடிகர் திலகத்துக்கு பாடிய பாடல்கள் ஏராளம். 1964 ல் வெளிவந்த கர்ணன் படத்தில் வரும் மொத்த கதையையும் சொல்லும் விதமாக அமைந்த கண்ணதாசன் வரிகள்." உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்ற பாடலை கம்பீரமாகவும் உருக்கமாகவும் நம்மை குரலில் மயக்கியிருப்பார் சீர்காழியார்.

விநாயகர் , முருகன் பக்தி பாடல்களை அதிக அளவில் பாடி உள்ளார். பல விருதுகளை பெற்ற இவருக்கு 1983 ல் பத்மஶ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

பக்தி, வீரம், கம்பீரம், குழையும் காதல், தத்துவம், துயரம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் என்று எல்லா வகையான உணர்வுகளையும் நமக்குள் தனது குரலால் கடத்தி தலைமுறை கடந்தும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகர் சீர்காழி கோவிந்த ராஜன். உடலால் உலகை விட்டு மறைந்தாலும் தனது குரலால் இன்னும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்.அவரின் நினைவுநாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

IPL_Entry_Point