வச்சு செய்யும் விஜய் சேதுபதி.. பிக்பாஸில் புட்டு புட்டு வைக்கப்படும் உண்மைகள்.. ரோஸ்ட் செய்யும் ஹோஸ்ட்!
Oct 13, 2024, 01:50 PM IST
பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்த பஞ்சாயத்துகளில் அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டிருந்த நிலையில், அத்தனையையும் உடைத்து முதல் வாரமே அதகளம் செய்துள்ளார் விஜய் சேதுபதி.
பிக்பாஸ் சீசன் 8 தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து செய்து வருகிறார்.
மலுப்பி மலுப்பி கேள்வி கேட்ட விஜய் சேதுபதி
ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள பயன்படுத்திய அத்தனை பொய்களையும் நேற்று ஒரே நாளில் முடித்துவிட்டிருப்பார். பெண்கள் ஏன் அறையை தேர்ந்தெடுத்தார்கள், ஆண்கள் ஏன் விட்டுக் கொடுத்தார்கள் என பதில் வந்த போதே வீட்டிலுள்ள அனைவரின் முகமும் மாறியது. அவர்கள் காரணங்களை மலுப்பி மலுப்பி கூறிய போதும் விஜய் சேதுபதி உண்மை வெளிவரும் வரை விடாமல் கேள்வி எழுப்பி வந்தார்.
அதிலும், அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் முன்பே, நறுக்கென்று கூறிய விதமும், இத்தனை ஆண்டுகால பிக்பாஸ் வரலாற்றில் புதிதாக இருந்தது.
அறை விவகாரம்
பின்னாள் வரும் போட்டியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அறையை தேர்வு செய்ததாகவும், அதற்கு பெண்கள் அனைவரும் ஆண்களின் நாமினேஷன் கோரிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறிய சுனிதாவும், ஆனந்தியும் நேற்று பிங்க் கலர் பிடிக்கும் என்பதால் எடுத்தேன், என் பொருள் வைக்க நிறைய இடம் இருக்கும் என நினைத்தேன், நாங்கள் சமைக்க வேண்டுமோ என நினைத்தேன், பெண்கள் ரெடியாக அதிக நேரம் எடுக்கும் அதனால் எடுத்தேன் என தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை கூறிய பொழுது பெண்கள் அனைவரின் முகத்திலும் கோபம் தெரிந்தது.
நாமினேஷனால் அமைதியான ஆண்கள்
இதையடுத்து, ஆண்கள் அணியினருக்கு நாமினேஷன் என்ற கோரிக்கையை அங்கு வைக்கவில்லை என்றால் அவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை எனவும் கூறியிருந்தனர்.
இதைக் கேட்ட விஜய் சேதுபதி இங்குள்ள யாரும் போட்டியை விளையாட வரவில்லை, ஓய்வெடுக்க வந்துள்ளீர்கள், டூர் போவது போல் கிளம்பி வந்துள்ளீர்கள் எனக் கூறி அவர்களை அசிங்கப்படுத்தினார்.
டார்கெட் செய்யப்பட்ட ரவீந்தர்
அத்துடன், பிக்பாஸ் வீட்டில் நடந்த பிராங்க் விஷயத்தை பேசி ஒன்றாக இருந்த ஆண்கள் அணியை பிரித்தும் விட்டுள்ளார். ரவீந்தர், ரஞ்சித், அருண் ஆகிய 3 பேரின் நாமினேஷனை கருத்தில் கொண்டு ரவீந்தர் பிராங்க் செய்யலாம் என ஆண்கள் குழுவை அழைத்துள்ளார். ஆனால், ரஞ்சித், அருண், விஜே விஷால், தீபக், பவித்ரா என அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலும் கூறி, முடிவெடுத்து பிராங்க் செய்த நிலையில், அனைவரும் சேர்ந்து ரவீந்தர் மீது பழியை சுமத்தினர்.
பிராங்க் என சொல்லி ஆரம்பித்த ஒன்றை ரவீந்தர் தனக்காக பயன்படுத்திக் கொண்டார் என அருண், விஜே விஷால், ரஞ்சித் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். இதனால், ஆண்கள் அணியினர் நலனுக்காக பேசிய ரவீந்தர் தனித்து விடப்பட்டார்.
ஆனந்தியால் கலங்கிய ரவீந்தர்
அதுமட்டுமின்றி, பிராங்க் உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து செய்த செயலும் ரவீந்தருக்கு எதிரான பார்வையை முன்வைத்துள்ளது. ரவீந்தர் தன்னால் முடியவில்லை எனக் கூறி வீட்டில் உள்ளவர்களிடம் வேலை வாங்கி வந்தார். ஆனால், அவரால் நடிக்கும்போது மட்டும் நிற்க முடிகிறதா என ஆனந்தி கேள்வி எழுப்ப அது ரவீந்தரை மிகவும் பாதித்தது.
இதனால், மனமுடைந்த ரவீந்தரை முத்துக் குமரனைத் தவிர வேறு எந்த ஆண்களும் சமாதானப்படுத்தவும் இல்லை. தன்னிடம் சொல்லாமல் செய்தார், தங்களை பயன்படுத்திக் கொண்டார் என கூறிய அனைவரிடமும் ரவீந்தர் பிராங்கிற்கான காரணத்தை வலியுறுத்தவும் செய்துள்ளார் என்பதை விஜய் சேதுபதி அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்டார்.
கலவர வீடாக மாறிய பிக்பாஸ்
இதையடுத்து, வெளியில் தங்களை நல்லவிதமாக காட்ட நினைத்து ஆண்கள் தங்களின் சுயத்தன்மையை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டனர் எனவும் கூறியிருந்தார். இதனால், தற்போது பிக்பாஸ் வீடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், இப்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி என்ன செய்வார் என காத்திருத்த மக்களுக்கு நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே சம்பவம் செய்து வருகிறார்.
டாபிக்ஸ்