ஜி.வி.யுடன் இணையும் சைந்தவி..நடிகையாகும் கிரிக்கெட் வீரர் மனைவி! அரசின் கட்டணமில்லா ஓடிடி - டாப் சினிமா செய்திகள் இன்று
Nov 21, 2024, 11:40 PM IST
ஜி.வி.யுடன் இணையும் சைந்தவி, நடிகை மீதான வழக்கு ரத்து, நடிகையாகும் கிரிக்கெட் வீரர் மனைவி அரசின் கட்டணமில்லா ஓடிடி உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
கங்குவா படத்துக்கு இருந்து எதிர்மறை விமர்சனங்கள் நீங்கி தற்போது ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் பல்வேறு திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் சற்று உயரத் தொடங்கியுள்ளது. அதேபோல் அமரன் படம் தொடர்ந்து மூன்றாவது வாரத்துக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வேறு எந்த பெரிய படமும் இந்த வாரம் வெளியாகாத நிலையில் தமிழில் இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
சீறும் புயலாக மாறியுள்ளேன் என ஜாமினில் வெளிவந்த கஸ்தூரி பேச்சு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் சிறையில் இருந்த நடிகை கஸ்தூரி, ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதால்,குழந்தையைப் பராமரிக்கக்கோரி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்த நிலையில் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்தபின் இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் சிறை வளகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, "ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு மிக பெரிய, மனம் மிகுந்த நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிக பெரிய நன்றி" என்று கூறினார்
மத்திய அரசு கட்டணமில்லா ஓடிடி தளம்
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம சார்பில் , வேவ்ஸ் என்கிற ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெற்ற 55வதுசர்வதேச திரைப்பட விழாவில் பிரசார் பாரதியின் தலைவர் நவ்னீத் சிங் சேகல் பேசும்போது, "தேசிய ஒளிபரப்பாளர் என்ற முறையில், தூய்மையான குடும்ப பொழுதுபோக்கை சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடையச் செய்வது எங்கள் கடமை. பிரசார் பாரதியின் ஓடிடி தளம் இருக்க வேண்டும் என உணர்ந்தோம். அப்படிதான் வேவ்ஸ் ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளோம். இதில் செய்திகள், விளையாட்டுகள் மட்டுமின்றி, நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளும் மக்களுக்கு வழங்கப்படும். இந்தியாவின் வளமான கலாச்சார, பாரம்பரியம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓடிடி இருக்கும்" என்றார்.
இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, அசாமி ஆகிய 12+ மொழிகளில் சர்வதேச கண்ணோட்டத்துடன் , இந்திய கலாச்சாரத்தை தழுவிய உள்ளடக்கிய இந்தியா கதைகளுடன் 'வேவ்ஸ்' ஒரு பெரிய ஓடிடியாக நுழைகிறது. வீடியோ ஆன் டிமாண்ட், இலவசமாக விளையாடும் கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்ட்ரீமிங், 65 லைவ் சேனல்கள், வீடியோ மற்றும் கேமிங் உள்பட 10+ வகை இன்ஃபோடெயின்மென்ட் வகைகளில் பரவியிருக்கும். WAVES OTT ஐ பதிவிறக்கம் செய்வதற்கும் அதில் உள்ள உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கும் கட்டணம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீரியலை தொடங்கிய மெட்டி ஒலி திருமுருகன்
மெட்டி ஒலி சீரியல் மூலம் தமிழ்நாடு மக்களிடையே பிரபலமான இயக்குநர் திருமுருகன், தற்போது புதிய டிவி சீரியலை தொடங்கியுள்ளார். இது மெட்டி ஒலி இரண்டாம் பாகமா அல்லது புதிய சீரியலா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிய தொடரை இயக்க இருப்பதாக தனது யூடியூப் சேனல் மூலம் திருமுருகன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் பணிகளை தொடங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீதான வன்கொடுமை வழக்கு ரத்து
கடந்த 2013-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி, பட்டியல் சமூகத்தினரை இழிவு செய்யும் வகையிலான வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்ப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை விசாரணை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 2013இல் அவர் பேசியதற்கு ஷில்பா ஷெட்டி மீது 2017இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும், சாதி ரீதியான உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தையை பேசவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு ஷில்பா ஷெட்டி மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகையாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் மனைவி
யூடியூப்பர், டான்ஸராக இருந்து வரும் தனாஸ்ரீ வர்மா தற்போது டோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் யஸ்வேந்திரா சஹால் மனைவி. தனாஸ்ரீ வர்மா நடிக்கும் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் யஷ் ஹீரோவாக நடிக்கிறார். ரெமான்டிக் கதையம்சத்தில் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது
மனைவிக்கு விலை உயர்ந்த பரிசளித்த அஜித்குமார்
தனது மனைவி ஷாலினிக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த காரை பரிசாக நடிகர் அஜித்குமார் அளித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் போட்டோ வைரலாகி வருகிறது. கார்களின் மீது அதிக பிரியம் கொண்ட அஜித்குமார் லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்திருப்பதாகவும் இதன் விலை ரூ.63 லட்சம் எனவும் கூறப்படுகிறது
தயாரிப்பாளர் திருமணத்தில் அருகருகே அமர்ந்த தனுஷ் - நயன்தாரா
தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவரது திருமணத்துக்கு நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
தனது டாக்குமென்டரி படத்துக்காக தனுஷை விமர்சித்திருக்கும் நடிகை நயன்தாரா கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் ஒரே திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதுடன், அருகருகே இருக்கையில் அமர்ந்து பேசாமல் இருந்துள்ளனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
ஜி.வி. பிரகாஷ் குமாருடன் மீண்டும் இணையும் சைந்தவி
மலேசியாவில் நடைபெற்றும் தனது இசை நிகழ்ச்சியில் பாடகி சைந்தவியிடம் பங்கேற்குமாறு கேட்டுகொண்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இதை ஏற்றுக்கொண்டு சைந்தவியும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் நட்பு ரீதியில் இசை நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்க உள்ளார்கள்
ஏ.ஆர். ரஹ்மானுக்கு மற்றொரு சர்வதேச விருது
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஆடு ஜீவிதம்: தி கோட் லைஃப். இந்தப் படத்துக்காக ஹாலிவுட் மியூசிக் மீடியா இண்டிபெண்டன்ட் ஃபிலிம் (வெளிநாட்டு மொழி) பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக 2024ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
அமரன் படக்குழுவுக்கு எதிராக நஷ்டஈடு கேட்டு வழக்கு
அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூங்க முடியாமல், இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்திருப்பதாக கூறி கல்லூரி மாணவர் வாகீசன் என்பவர், படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். சாய் பல்லவி கொடுத்த போன் நம்பரால் தினமும் தொல்லையை அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.