மீண்டும் இணையும் ஜோடி..! சொன்ன சொல் தவறவில்லை - ஜி.வி.க்காக ஒப்புக்கொண்ட பாடகி சைந்தவி
மலேசியாவில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஜி.வி.க்காக ஒப்புக்கொண்டதாக பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். தங்களது பிரிவு குறித்து தெரிவித்தபோது நண்பர்களாக தங்களின் பயணம் தொடரும் என்று சொன்ன சொல் தவறாமல் இருவரும் நடந்துகொண்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு விவாகரத்து ஆண்டு என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த லிஸ்டில் யாரும் நினைத்து கூட பார்க்காத இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் - சாயிரா பானு ஆகியோரின் பிரிவு உள்ளது.
ஏற்கனவே, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - பாடகி சைந்தவி, நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோர் பிரவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்த தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்துள்ளனர். இருப்பினும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக தெரிவித்துள்ளார்.
ஜி.வி.க்காக சம்மதம் தெரிவித்த சைந்தவி
தங்களது பிரிவு குறித்து அறிவத்தபோது, நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் என்று ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி ஜோடி கூறியிருந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது இருவரும் நடந்து கொண்டுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடத்த இருக்கும் இசைக்கச்சேரி வரும் ஜனவரி மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷின் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்கள் பாடப்பட உள்ளன. அதன்படி அவரது இசையில் பாடகி சைந்தவி பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இதையடுத்து ஜி.வி. பிரகாஷ் குமார் கேட்டுக்கொண்டதால், இந்த இசை நிகழ்ச்சியில் பாடகி சைந்தவி பங்கேற்கவுள்ளார். இந்த தகவலை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி பிரிவு
பள்ளியில் படித்தபோதே காதல் வயப்பட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி ஜோடி, கடந்த 2013இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2020இல் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இதுபற்றி முறையாக இருவரும் அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
மனைவி சைந்தவியை பிரிவது குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் "ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு,
அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
டிவியில் களமிறங்கிய சைந்தவி
தற்போது சைந்தவி பின்னணி பாடகியாகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம ப சீனியர்ஸ் 4 பாடல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
அதேபோல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பு, நடிப்பு என தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1, சைரன், ரெபல், கள்வன், டியர், தங்கலான், அமரன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இது தவிர தெலுங்கில் லக்கி பாஸ்கர், மட்கா இந்தியில் சர்பிரா ஆகிய படங்கள் வந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் ரெபல், கள்வன், டியர் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.