Chiranjeevi: 24,000 டான்ஸ் மூவ்மெண்ட், 537 பாடல்கள்..கின்னஸ் சாதனை புரிந்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி - முழு விவரம்
Sep 22, 2024, 09:40 PM IST
இந்திய சினிமாவில் மிகவும் வளமான (செழிப்பான) நட்சத்திரம் என்ற கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இதுவரை தனது சினிமா வாழ்க்கையில் 537 பாடல்களில் 24 ,000 மூவ்மெண்ட்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி 1978இல் இருந்து தற்போது வரை 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாக்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் இவர் தமிழ், இந்தி. கன்னடா ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை
இதையடுத்து இந்திய திரையுலகில் மிகச் சிறந்த வளமான சினிமா நட்சத்திரம் என்ற கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் பெற்றுள்ளார் மெகாஸ்டார் கே சிரஞ்சீவி.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதி ஒருவர், சிரஞ்சீவியிடம் சான்றிதழை வழங்கினார்.
அப்போது "இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் செழிப்பான திரைப்பட நட்சத்திரம் நடிகர்/நடனக் கலைஞர், கொனிடேலா சிரஞ்சீவி அல்லது மெகா ஸ்டார் 20 செப்டம்பர் 2024 அன்று அடைந்தார்" என்று கின்னஸ் உலக சாதனைகள் வழங்கிய சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது.
45 ஆண்டு சினிமா பயணம்
"கின்னஸ் உலக சாதனையைப் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் எனது திரையுலக வாழ்க்கை, நடனம் என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது" என்று சிரஞ்சீவி கூறினார். இந்த கௌரவத்துக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 45 ஆண்டு கால சினிமா பயணத்தில், இதுவரை 156 படங்களில் நடித்துள்ளார். இதில் 537 பாடல்களில் 24,000 வித்தியாசமான டான்ஸ் மூவ்மெண்ட்கள் (நடன அசைவுகளை) நிகழ்த்தியுள்ளார் என நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மெகா ஸ்டார் 1978ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான நாள் செப்டம்பர் 22 ஆகும். அதே நாளில் அவர் கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றிருப்பது மற்றொரு சிறப்பு மிக்க தருணமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிரஞ்சீவிக்கு பாராட்டு அளித்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் பங்கேற்றார். அப்போது அவர், "நான் சிரஞ்சீவி காருவின் மிகப்பெரிய ரசிகன். அவரை என் மூத்த சகோதரராக பார்க்கிறேன்.
சிரஞ்சீவிக்கு இந்த விருது வழங்கப்படுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தனது எல்லா பாடல்களிலும் தனது இதயத்தில் இருந்து நெருக்கமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த விருதை பெற்றதில் அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார்." என்று கூறினார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வாழ்த்து
தெலங்கானா முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பிரபல திரைப்பட நடிகர் கொனிடேலா சிரஞ்சீவி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது தெலுங்கர்களுக்கு பெருமை அளித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்.
"ருத்ர வீணை", "இந்திரன்", "தாகூர்", "ஸ்வயம் க்ருஷி", "சைரா நரசிம்ம ரெட்டி", "ஸ்டாலின்" மற்றும் "கேங் லீடர்" போன்றவை அவரது பிரபலமான படங்களில் சில.
அவருக்கு இந்த ஆண்டு மே மாதம் இந்திய சினிமா ஐகான் வைஜெயந்திமாலாவுடன், சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதாக இருக்கும், பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.
இதற்கு முன் நடிகர் சிரஞ்சீவிக்கு 2006இல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
சிரஞ்சீவி புதிய படங்கள்
சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா என்ற பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். மல்லிதி வசிஷ்டா இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா, மீனாட்சி செளத்ரி, ஆஷிகா ரங்கநாத், சுரபி, இஷா சாவ்லா உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக போலா சங்கர் என்ற படம் கடந்த 2023இல் வெளியானது. தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது.
டாபிக்ஸ்