Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ - வசூல் மன்னன் சிரஞ்சீவி பர்த்டே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ - வசூல் மன்னன் சிரஞ்சீவி பர்த்டே

Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ - வசூல் மன்னன் சிரஞ்சீவி பர்த்டே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2024 06:11 PM IST

தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் சிரஞ்சீவி கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோவாக திகழ்கிறார். தெலுங்கு சினிமாவின் வசூல் மன்னன் என்ற அழைக்கப்படும் இவர் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ சிரஞ்சீவி பர்த்டே
Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ சிரஞ்சீவி பர்த்டே

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருந்தாலும், தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் நேரடி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகராக மட்டுமல்லாமல், தெலுங்கில் அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவாகவும் இருந்து வருகிறார்.

சினிமா பின்னணி இல்லாத தெலுங்கு ஹீரோ

தெலுங்கு சினிமாவில் என்டிஆர், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா என பழம்பெரும் முன்னணி நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலகட்டத்தில் இளம் நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பால் முத்திரை பதித்தவர் சிரஞ்சீவி.

பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின்னர் சினிமா மீதான ஆர்வத்தால் சென்னையில் இருக்கும் திரைப்பட கல்லூரி நடிப்பை பயிற்சியை முறையாக கற்றுக்கொண்டார் சிரஞ்சீவி. இதன் பின்னர் வாய்ப்புக்காக பல்வேறு சினிமா கம்பெனிகளை முயற்சித்து 1978இல் வெளியான பிராணம் கரீது என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

தீவிர ஹனுமான் பக்தரான இருந்து வந்த இவர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, சினிமாவில் நடிக்கும்போது தனது ஒரிஜினல் பெயருக்கு பதிலாக சிரஞ்சீவி என மாற்றிக்கொண்டார்.

எந்த சினிமா பின் புலமும் இல்லாமல் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கி தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஹீரோ என்று இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

சினிமாவில் நடிக்க தொடங்கி நான்கு ஆண்டுகளிலேயே 50 படங்களில் நடித்த சாதித்தார். ஹீரோவாக உருவெடுத்த புதிதில், 1981இல் பாலசந்தர் இயக்கத்தில் உருவான 47 நாட்கள் என்ற நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதே ஆண்டில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிரேக் டான்ஸில் கலக்கிய சிரஞ்சீவி

சிரஞ்சீவி மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல், கிளாஸ் கதைகளிலும் நடித்துள்ளார். 1980களின் காலகட்டத்தில் இவர் சினிமா கேரியர் உச்சத்தில் இருந்தது. அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டும் இவர், செண்டிமென்ட், காதல் காட்சிகளிலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைலால் ரசிகர்களை கட்டிப்போட்டது போல் சிரஞ்சீவி அற்புதமாக பிரேக் டான்ஸ் ஆடி, அனைவரையும் ஆட வைத்தவராக திகழ்ந்தார்.

சிரஞ்சீவி படங்கள் என்றாலே அவரது டான்ஸை பார்ப்பதற்கு, கொண்டாட்டதுடன் ஆடுவதற்கும் என தனி கூட்டமே இருந்தது. இப்போது கூட சிரஞ்சீவியின் சில பழைய டான்ஸ் மூவ்மெண்ட்கள் தெலுங்கு மக்களின் ரீல்ஸ், இன்ஸ்டா ஸ்டோரிகள் என அன்றாட வாழ்க்கையில் தவறாமல் இடம்பெறும் விஷயமாக உள்ளது.

கோடிகளில் சம்பளம் வாங்கிய இந்திய ஹீரோ

1992இல் வெளியான ஆபத்பாந்தவுடு என்ற படத்துக்காக ரூ. 1.25 கோடி சம்பளம் பெற்றார் சிரஞ்சீவி. இதன் மூலம் கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையை பெற்றார். அதேபோல் 1987இல் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற அழைக்கப்பட்ட முதல் தென் இந்திய ஹீரோ என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

இந்த அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை வென்றுள்ளார். அதேபோல் சினிமாவில் ஃபிலிம்பேர் விருதுகள், ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.

அரசியல் மற்றும் சமூக சேவை

2008இல் பிரஜ ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய சிரஞ்சீவி, 2009இல் ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றார். 16 சதவீதம் வாக்குகளையும் வென்றார்.

தொடர்ந்து 2011இல் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்து, 2012 முதல் 2018 வரை ராஜ்யசபா எம்பியாகவும், மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் இருந்தார்.

அதேபோல் சிசிடி என்ற பெயரில் சிரஞ்சீவி அறக்கட்டளையை 1998இல் தொடங்கி, ரத்த வங்கி, கண் தானம் வங்கி போன்றவற்றை செயல்படுத்தி வருகிறார். கோவிட் பாதிப்புக்கு பின்னர் ஆக்ஸிஜன் வங்கியும் இவரது அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.

சினிமா பின்னணி இல்லாமல் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்த சிரஞ்சீவியின் குடும்பம் டோலிவுட் சினிமாவ ஆட்கொண்டிருக்கும் முக்கிய குடும்பமாக உள்ளது. இவரது மகன் ராம் சரண், மருமகன் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோக்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் தவிர வருண் தேஜ், நிகரிகா, சாய் தரம் தேஜ், அல்லு சிரிஷ் என தெலுங்கு சினிமாவில் பல நடிகர்கள் இவரது குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அரசியலில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பின் மீண்டும் கைதி எண் 150 படம் மூலம் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்தார் சிரஞ்சீவி. இது தமிழில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான கத்தி ரீமேக்காகும். தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி, வால்டர் வீரய்யா என ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது செகண்ட் இன்னிங்ஸிலும் தனது ட்ரேட்மார்க் நடிப்பு, பிரேக் டான்ஸை தொடர்வதோடு, வசூல் மன்னனாகவும் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.