பேட்டிங் சொர்க்கபுரி..துவம்சம் செய்த சாம்சன்,திலக் வர்மா ஜோடி - டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!ரன் மழையுடன் சாதனை மழை
Nov 15, 2024, 11:46 PM IST
பேட்டிங் சொர்க்கபுரியான ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் வைத்து தென் ஆப்பரிக்கா பவுலர்கள் துவம்சம் செய்த சாம்சன், திலக் வர்மா ஜோடி, 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்து புதிய வரலாறு படைத்திருக்கும் இந்தியா ரன் மழையுடன் சாதனை மழை பொழிந்துள்ளது
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது தேர்வு சரி என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணி, தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனை புரிந்துள்ளது.
இந்திய இன்னிங்ஸில் திலக் வர்மா 120, சஞ்சு சாம்சன் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்பரிக்கா அணியில் மொத்தம் 7 பவுலர்கள் பந்து வீசிய நிலையில் அனைவரும் ரன்களை வாரி வழங்கி வள்ளல்களாக இருந்துள்ளனர். அனைத்து பவுலர்களுக்கும் எகானமியும் 10 ரன்களுக்கு மேல் என உள்ளது.
சாம்சன் - திலக் வர்மா மிரட்டல் ஆட்டம்
இந்திய அணியின் ஓபனர்களான சஞ்சு சாம்சன் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். 5.5 ஓவரில் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 73 ரன்கள் என எட்டிய நிலையில், அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சாம்சன் - திலக் வர்மா ஜோடி தென் ஆப்பரிக்கா பவுலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அவர்களின் அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கதோடு இருவரும் சதமடித்து, 210 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர்.
முதல் வீரராக சாம்சன் சாதனை
முதல் போட்டியில் சதம், பின்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான சாம்சன் இந்த போட்டியில் மீண்டும் பார்முக்கு திரும்பி சதமடித்துள்ளார். இந்த ஆண்டில் 3வது டி20 சதமடித்திருக்கும் சாம்சன், ஒரே காலண்டர் ஆண்டில் மூன்று சதமடித்த முதல் வீரர் என்ற தனித்துவ சாதனை புரிந்துள்ளார்.
ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது சதமடித்த வீரராகவும் மாறியுள்ளார். வெறும் 5 இன்னிங்ஸில் அவர் இதை நிகழ்த்தியுள்ளார்.
இளம் பேட்ஸ்மேனாக திலக் வர்மா கலக்கல்
அதேபோல் 22 வயதாகும் இளம் இந்திய பேட்ஸ்மேனான திலக் வர்மா கடந்த போட்டியில் சதமடித்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது சதமடித்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த இன்னிங்ஸில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அத்துடன் கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். 41 பந்தில் சதமடித்து அதிவேக சதத்தின் சாதனையிலும் இணைந்துள்ளார்.
ஸ்கோர் சுருக்கம்
சஞ்சு சாம்சன் தனது இன்னிங்ஸில் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்கள் அடித்துள்ளார். அவர் 9 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.