கடைசி ஓவர் வரை பயம் காட்டிய ஜான்சன்! திலக் வர்மா சாதனை சதம்..தென் ஆப்பரிக்காவுக்கு வந்த சோதனை
அபிஷேக் ஷர்மா அதிரடி மற்றும் திலக் வர்மா சாதனை சதம் மூலம் தென் ஆப்பரிக்காவுக்கு சோதனை ஏற்பட, இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. தென் ஆப்பரிக்கா இன்னிங்ஸில் அதிரடியில் மிரட்டிய ஜான்சன், இந்திய பவுலர்களுக்கு கடைசி ஓவர் வரை பயம் காட்டினார்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பாரிக்காவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி சென்சுரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதிலாக ரமன்தீப் சிங் சேர்க்கப்பட்டார்.
தென் ஆப்பரிக்க பவுலிங்
இதையடுத்து டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107, அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஆண்டிலே சிமெலேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
தென் ஆப்பரிக்கா சேஸிங்
220 ரன்கள் என்கிற கடினமான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54, ஹென்ரிச் கிளாசன் 41. ஐடன் மார்க்ரம் 29 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா அதிரடி
முதல் போட்டியில் சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன், இரண்டாவது போட்டியில் டக் அவுட்டான நிலையில், மூன்றாவது போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காத அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் தனது வழக்கமான அதிரடி பாணியில் பேட் செய்தார்.
இவருடன் இணைந்து திலக் வர்மாவும் அதிரடியில் கலக்கினார். இந்த போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்து களமிறக்கப்பட்டார் திலக் வர்மா. அபிஷேக் ஷர்மா - திலக் வர்மா ஜோடி தென் ஆப்பரிக்கா பவுலர்களை அடித்து துவம்சம் செய்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 8.1 ஓவரில் இந்தியா 100 ரன்களை கடந்தது. 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் அபிஷேக் ஷர்மா.
திலக் வர்மா சாதனை
அதன் பின்னர் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை என்றாலும், தொடக்கம் முதல் சிறப்பாக பேட் செய்து வந்த திலக் வர்மா 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 56 பந்துகளில் 107 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதம் மூலம் டி20 போட்டிகளில் இளம் வயதில் பேட்ஸ்மேன் என்ற சாதனையில் இரண்டாவது இடத்தை பிடித்தார் திலக் வர்மா. அத்துடன் இதற்கு முன்னர் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.
பயத்தை காட்டிய ஜான்சன்
தென்ஆப்பரிக்கா அணிக்கு ஓபனர்கள் அதிரடியான தொடக்கதத்தை தந்த போதிலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் அவுட்டாகி வெளியேறினர். ஓபனர்கள் ரியான் ரிக்கல்டன் 20, ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 21, ஐடன் மார்க்ரம் 29 என அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியனுக்கு நடையை கட்டினர்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணி 142 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது களமிறங்கிய மார்கோ ஜான்சன், இந்திய பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். விரைவாக ரன்கள் குவித்த அவர் 16 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் 26 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியால் பயத்தை காட்டி வந்த ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பரிக்கா கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டும் எடுக்க இந்தியா வெற்றியை பதிவு செய்தது.
சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை ஜோகன்னஸ்பெர்கில் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்