இந்திய கிரிக்கெட்டை ரசிகர்களின் சேட்டன்..அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்
சேட்டன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்படும் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தனது தெறிக்கவிடும் ஆட்டத்தின் மூலம் எதிரணியனரை திணறவிடும் பேட்ஸ்மேனாக உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வெள்ளை பந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜொலிப்பவர் சஞ்சு சாம்சன். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பிடித்திருந்தார். இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை என்றாலும், டி20 உலகக் கோப்பை வென்றவர் என்ற பெருமையை பெற்றவராக உள்ளார்.
கிரிக்கெட் பயணம்
கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், தந்தை போலீஸில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். அதேசமயம் கால்பந்து வீரரான அவர் சந்தோஷ் டிராபி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார். சஞ்ச சாம்சன் தம்பி சாலி சாம்சனும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த நிலையில் தற்போது ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.
தந்தையின் பணி காரணமாக சிறு வயதை டெல்லியில் கழித்த சாம்சன் அங்குதான் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அஸ்திவாரமிட்டார். டெல்லியில் யு13 கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், மகனுக்காக தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற சாம்சனின் தந்தை, கேரளாவுக்கு குடிபெயர்ந்து மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்தார்.