சூப்பர் சுவையான முருங்கைக்காய் ரசம்! சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!
Nov 03, 2024, 01:41 PM IST
சூப்பர் சுவையான முருங்கைக்காய் ரசம், சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை இரண்டு முறைகளில் செய்யமுடியும். வேகவைத்து உரித்து செய்யலாம். வேகவைத்து அப்படியே மிதகக் வைத்தும் செய்யமுடியும்.
முருங்கை மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவைதான். முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. காயிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். முருங்கை மரம் வைத்திருந்தால், 80 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பது பழமொழி. ஏனெனில் முருங்கைக்காயை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. முருங்கைக்காயை சாம்பாரில் சேர்த்துதான் சாப்பிட்டு பழக்கம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால், நீங்கள் அதை அனைத்து உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இப்போது முருங்கைக்காயை பொடி செய்து விற்கிறார்கள். நீங்கள் தினமும் எந்த சாம்பார் செய்தாலும் அதில் அந்தப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கைக்காயின் நன்மைகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது.
எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முருங்கைக்காயில் ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
முருகைக்காய் – 1
பச்சை மிளகாய் – 1 (கீறியது)
மல்லித்தழை – சிறிதளவு
பெரிய தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 6
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சித் துருவல் – அரை ஸ்பூன்
பூண்டு -4 பல்
சாம்பார் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறிய துண்டு
புளி – சிறு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
துண்டு துண்டாய் அரிந்த முருங்கைக்காயைப்போட்டு நறுக்கிய தக்காளி, துவரம்பருப்பு, மஞ்சள் தூள், சேர்த்து அவை மூழ்கும் அளவு நீர் விட்டு குக்கரில் 3 விசில்கள் வரும் வரை வேகவைக்கவேண்டும்.
இதை ஆறவைத்த பின்னர், முருங்கைக்காய், தக்காளி, பருப்பை கையால் நன்றாக பிசைந்து, முருங்கைக்காயின் தோல்களை நீக்கிவிடவேண்டும். இந்தக் கலவையுடன் மல்லி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் புளியைக்கரைத்து சேர்க்கவேண்டும்.
தண்ணீர் மொத்தம் நாலைந்து டம்ளர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய், இவற்றை ஒன்று பாதியாக தட்டி சேர்க்கவேண்டும். தேவையான உப்பு சேர்த்துக்கரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்விட்டு, அது சூடானவுடன், கடுகும், பெருங்காயமும் போட்டு கடுகு வெடித்ததும் கரைத்த ரசத்தை அதில் சேர்க்கவேண்டும். ரசம் நன்றாக நுரைத்து வரும்போது சாம்பார் பொடியைச் சேர்க்கவேண்டும்.
மீண்டும் ஒரு கொதி வந்தவுடன், தீயை அணைத்து, சிறிது மல்லித் தழைகள் தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும். ருசியான முருங்கைக்காய் ரசம் தயார். இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
இங்கு எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள் என அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை தெரிந்துகொள்ள நீங்கள் ஹெச்.டி. தமிழின் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்