உப்புமா படமா? உங்களுக்கு அர்னால்டை வைத்து படம் எடுத்தா ஓகேவா? பாய்ந்து வந்த டைரக்டர்
மஞ்சள் வீரன் படத்திற்கு முன் நான் எடுத்த திரு.வி.க பூங்கா படத்தில் அர்னால்டை நடிக்க வைத்திருந்தால் தான் அதனை நல்ல படம் என கூறுவார்கள் என இயக்குநர் செல் அம் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்ற அறிப்பு வெளியாகி அந்தப் படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி வந்தது. இதற்கிடையில், படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், டிடிஎஃப் வாசன் படத்திலிருந்து நீக்கப்படுவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார். மேலும், இப்படத்தின் புதிய கதாநாயகனை விரைவில் அறிமுகப்படுத்துவேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
டிடிஎஃப் வாசனுக்கு பதில் கூல் சுரேஷ்
பின் , டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படத்திற்கு புதிய கதாநாயகனாக கூல் சுரேஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களுடன் படத்திற்கான பூஜையும் போட்டுள்ளார்.
உப்புமா படம்
இந்நிலையில், மஞ்சள் வீரன் திரைப்படத்திற்கு முன் இவர் எடுத்த திருவிக பூங்கா படத்தை டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்கள் உப்புமா படம் என கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த செல் அம் தனது திரைப்படம் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
திருவிக பூங்கா படத்தைப் பற்றி பேசுகையில், நான் டிடிஎஃப் வாசனை பார்த்து பழகி படம் எடுக்கத் தொடங்கியதற்கு முன் திருவிக பூங்கா என்ற படத்தை எடுத்துவிட்டேன். அந்தப் படத்தை உப்புமா படம் என அவரது ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அது உப்புமா படம் அல்ல.
அர்னால்ட் வர வேண்டுமா?
அந்த படத்தில் மக்களிடம் மிகவும் பிரபலமான நடிகர்கள் காதல் தண்டபாணி, ஜான் விஜய் நடித்து உள்ளனர். பாடலாசிரியர் தாமரை மேடம், புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் படத்திற்கு பாடல்களை எழுதி இருக்கிறார். அதுமட்டுமின்றி, என் படத்திற்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடன இயக்குநராக இருந்து இருக்கிறார்.
என்.எஸ்.கே. ரம்யா, கானா பாலா என பலரும் என் படத்தில் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருக்கும் திருவிக பூங்கா படம் ஒரு உப்புமா படமா? அப்படி என்றால் உங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நடிகர் அர்னால்ட்டை அழைத்து வந்து தான் படம் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலும் அதுவும் உப்புமா படம் என்று தான் விமர்சிப்பார்கள் என கிண்டலடித்தார்.
பொங்கும் வாசன்
மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். நான் அதற்காக பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கூற மாட்டேன்.
அவர் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிந்த காரணத்தால் நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன். அந்தக் காசெல்லாம் எனக்கு தற்போது திரும்ப வேண்டாம். போன் அடித்தால் அவர் எடுக்காமல் உடன் இருப்பவரை வைத்து பேச வைப்பதற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம் என பேசியிருந்தார். மேலும், தன்னிடம் கலந்தாலோசிக்காமலே இயக்குநர் செல் அம் தன்னை படத்தில் இருந்து நீக்கியதாகவும் பேசி இருந்தார்.
இந்த நிலையில் தான், இயக்குநர் செல் அத்தை டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால், பல இடங்களில் இருவருக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

டாபிக்ஸ்