இனி சாட் மசாலாவையும் வீட்டிலே தயாரிக்கலாம்! சுவை, மணமூட்டிகள் இல்லாத ஆர்கானிக் மசாலா!
Dec 01, 2024, 12:46 PM IST
வீட்டிலே சாட் மசாலா செய்வது எப்படி?
இன்றைய காலத்தில் அனைத்து வகை பொடிகளும் தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. முதலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் என வைத்திருப்பார்கள். இப்போது அதனுடன் கரம் மசாலாத்தூள், சாம்பார் தூள், ரசப்பொடி, கறி மசாலாப்பொடி என அனைத்து பொடி வகைகளையும் செய்து வைத்துக்கொண்டு சமையலை எளிமையாக்கிக்கொள்கிறார்கள். இன்றைய நாட்களில் மீன் வறுவல் மசாலா, கார குழம்பு மசாலா, பிசிபேலாபாத் மசாலா போன்ற பொடிகளைக் கூடி வீட்டிலே தயாரிக்க முடியும். இவற்றையும் தயாரித்து வைத்துக்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொள்ளும்போது சமையலும் எளிதாகும். அந்த வகையில் சமையலறையில் தற்போது சாட் மசாலாவும் இடம்பிடித்துள்ளது. சாட் மசாலாவும் இன்று சாலட் மற்றும் பொரியல் என அனைத்திலும் தூவி விற்கப்படுகிறது. இந்த சாட் மாசாலவை அனைவரும் சமோசா, பஜ்ஜிக்கு கூட தொட்டுக்கொண்டு சாப்பிடத் துவங்கிவிட்டார்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் நாம் எளிதாக வீட்டிலே தயாரித்துக்கொள்ள முடியும். அதேபோல், நாம் சாட் மசாலாவையும் வீட்டிலே தயாரித்துவிடமுடியும்.
வீட்டிலே சாட் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
சீரகம் – கால் கப்
மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
புதினா – 10 இலைகள் (காய்ந்தது)
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
அம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) – 2 டேபிள் ஸ்பூன்
(இது கடைகளில் கிடைக்கும்)
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
சுக்குப்பொடி – அரை ஸ்பூன்
கல் உப்பு – ஒரு ஸ்பூன்
ப்ளாக் உப்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன், அதில் சீரகத்தை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவேண்டும். அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவேண்டும்.
பின்னர், மிளகு, புதினா இலை என ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும்.
இப்போது அடுப்பை அணைத்து, வாணலியில் இருக்கும் சூட்டில் கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி, பெருங்காயம், மாங்காய் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவேண்டும்.
இப்போது, அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்தால் சாட் மசாலா வீட்டிலே தயார். இனி, வீட்டில் பஜ்ஜி, பக்கோடா, சிப்ஸ் என எந்த வகையான ஸ்நாக்ஸ் செய்தாலும் சாட் மசாலா தூவி சாப்பிட்டு மகிழுங்கள். அது மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். கடைகளில் உள்ள சாட் மசாலாக்களில் ப்ரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படும்.
வீட்டிலே நீங்கள் செய்யும்போது, இது எந்த சுவையூட்டிகள், மணமூட்டிகள் எதுவுமின்றி, ஆரோக்கியமானதாகக் கிடைக்கிறது. எனவே கட்டாயம் இதை வீட்டில் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை சூப்களில் கூட தூவிக்கொள்ளலாம். சாலட்களிலும் தூவி சாப்பிடலாம். எனவே கட்டாயம் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வீட்டிலே சாட் தயாரிக்கும்போதும் இந்த மசாலாவைத் தூவிக்கொள்ளலாம். பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா சன்னா, பிரட் சன்னா என அனைத்து சாட் ஐயிட்டங்களையும் நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்