மணக்க மணக்க பிரியாணி மசாலா செய்வது எப்படி? இப்படி செய்து சுவையில் தெறிக்கவிடுங்கள்!
Oct 11, 2024, 01:47 PM IST
மணக்க மணக்க பிரியாணி மசாலா செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்து சுவையில் தெறிக்கவிடுங்கள். சூப்பர் சுவையான பிரியாணி மசாலா ரெசிபி இதோ உள்ளது.
பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி என அசைவ பிரியாணிகள், வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி, மீல் மேக்கர் பிரியாணி என சைவ பிரியாணி என எண்ணற்ற பிரியாணி வகைகள் உள்ளது. இதன் சுவை அலாதியானது மற்றும் பிரியாணியை செய்வதும் எளிதானது. ஒரு மதிய உணவுக்கு சாதம், சாம்பார், ரசம், மோர், காய்கறி, கூட்டு, பொரியல் என இத்தனை டிஷ்கள் செய்வதற்கு பதில் ஒரு பிரியாணியை செய்துவிட்டு, அதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடியையும் செய்துவிட்டு, அமைதியாக இருந்துகொள்ளலாம். பிரியாணி அத்தனை எளிமையான மதிய உணவு. இதற்கு தேவைப்பட்டால், 65 ரெசிபிக்களும், கிரேவி ரெசிபிக்களும் செய்துகொள்ளலாம். பிரியாணி செய்வதற்கு பிரத்யேக மசாலாக்களை உபயோகிக்க வேண்டும். அப்போது பிரியாணிக்கு தனிச்சுவை கொடுக்கும். இதற்கான மசாலாக்களை கடைகளில் வாங்கும்போது அதில் கலப்படம் இருக்கும். ஆனால், நீங்கள் பிரியாணிக்கான மசாலாக்களையும் வீட்டிலே தயாரிக்க முடியும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பட்டை – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
அன்னாசி பூ - 5 கிராம்
ஜாவித்திரி - 5 கிராம்
பிரியாணி இலை - 5 இலை
வர கொத்தமல்லி – ஒரு 1 ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய்- 10 கிராம்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் செய்துகொண்டால் நீங்கள் மாதக்கணக்கில் பிரியாணி மசாலாவை வைத்துக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு குறைவாக வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அனைத்து பொருட்களின் அளவையும் அதற்கு ஏற்றாற்போல் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பொருட்களை தூசி இல்லாமல் எடுத்து, நன்றாக காயவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அனைத்தையும் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து பொடியாக பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் அதிகம் செய்தால் அதை அடிக்கடி திறக்காத ஒரு டப்பாவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு சிறிய டப்பாவில் அன்றாட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த மசாலாவை நீங்கள் எந்த பிரியாணி செய்தாலும், அதில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும். ஒரு கிலோ சிக்கன் பிரியாணி செய்தால் இதில் ஒரு ஸ்பூன் சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்.
இந்த மசாலாவை சேர்க்கும்போது வேறு எந்த மசாலாவும் சேர்க்க வேண்டிய தேவையில்லை. இந்த பிரியாணி மசாலா சூப்பரான சுவையில் அசத்தும். இந்த பொருட்களை நீங்கள் வறுத்து எடுத்து அரைத்தால் இதை கெட்டுப்போகாமல் 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
வறுக்காமல் அரைக்கும்போது, அதில் வண்டு வரும். மசாலாவும் விரைவில் கெட்டுப்போகும். இந்த பிரியாணி மசாலாவை நீங்கள் பிரியாணி செய்ய மட்டுமல்ல, வாழைக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு வறுவலிலும் சேர்த்துக்கொள்ளலாம். வேறு எந்த பொரியலுக்கும் பயன்படுத்தலாம்.
சூப்பர் சுவையில் அசத்தும். மேலும் வறுக்கும்போது கருகிவிடாமல் இருக்க அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். கவனமாக அருகில் இருந்து பிரட்டிவிட்டு வறுக்கவேண்டும்.
டாபிக்ஸ்