Urad Dal Laddu : எலும்புகளை உறுதிப்படுத்த உதவும் கருப்பு உளுந்து லட்டு.. இடுப்பு வலி, கை கால் வலி பறந்தே போகும் பாருங்க!
Aug 30, 2024, 01:53 PM IST
Urad Dal Laddu : கருப்பு உளுந்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் பலமடையும். அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும்.
Urad Dal Laddu : கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதனால் ரத்த சோகை பிரச்சனையை எளிதில் தீர்க்கும். கருப்பு உளுந்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் பலமடையும். அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். இத்தனை சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்தில் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
கருப்பு உளுந்து லட்டு செய்ய தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - அரைகிலோ
நிலக்கடலை - கால் கிலோ
ஏலக்காய் - 6
நாட்டு சர்க்கரை - 3/4 கிலோ
நெய் - 200 மில்லி லிட்டர்
முந்திரிபருப்பு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
கருப்பு உளுந்து லட்டு செய்முறை
கருப்பு உளுந்தை ஒரு வாணலில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்தால் லட்டு மிகவும் ருசியாக இருக்கும்.
பின்னர் நிலக்கடலையையும் நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது வறுத்த உளுந்து, நிலக்கடலையுடன் ஏலக்காய் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளலாம். அல்லது மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைத்து கொள்ளலாம். அதில் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேங்காயை நன்றாக வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி அதில் முந்திரியை சிறிதாக நறுக்கி சேர்த்து பொரிக்க வேண்டும். உளுந்து, நிலக்கடலை, சர்க்கரை பொடியில் முந்திரி வறுத்த நெய்யை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். நெய் சூடாக இருக்கும் போதே அதில் உளுந்து லட்டு பிடித்து கொள்ள வேண்டும். இந்த லட்டை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மேலும் சில நாட்கள் வைத்து சாப்பிட விரும்பினால் தேங்காய் துருவல் சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.
இந்த லட்டு உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. உளுந்தங்களி சாப்பிட விரும்பாத குழந்தைகள் கூட இந்த உளுந்து லட்டை ஆசையாக சாப்பிடுவார்கள்.
குறிப்பு : நீங்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தட்டி சேர்த்து கொள்ளலாம். கருப்பட்டி தூசியாக இருந்தால் லேசா பாகுகாய்ச்சி அதை வடிகட்டி சேர்த்து கொள்ளுங்கள்
கருப்பு உளுந்தின் நன்மைகள்
கருப்பு உளுந்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். உடலுக்கு அதிக ஆற்றலை தரும். குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உளுந்து சேர்த்த உணவுகளை பயன்படுத்துவது நல்லது. தினமும் குறிப்பிட்ட அளவு உளுந்து சேர்ப்பது உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது. கருப்பு உளுந்து தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்க உதவுகிறது.
கருப்பு உளுந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிறுநீரகங்களை பாதுகாக்க கருப்பு உளுந்து உதவுகிறது. ஆண் இனப்பெருக்க உறுப்பு அரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.