புஷ்பா பட நடிகர் மீது பாலியல் வழக்கு..பாரம்பரிய முறையில் ஸ்டார் தம்பதி இரண்டாவது திருமணம்! டாப் சினிமா செய்திகள் இன்று
Nov 27, 2024, 11:45 PM IST
புஷ்பா பட நடிகர் மீது பாலியல் வழக்கு, பாரம்பரிய முறையில் ஸ்டார் தம்பதி இரண்டாவது திருமணம், தனுஷுக்கு சாதகமாக வந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பு உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
தனுஷ் தொடர்பான இரண்டு வழக்குகளில் இன்று அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது கோலிவுட்டில் ஹாட் செய்தியாக இருந்து வருகிறது. இதனுடன் தமிழ் சினிமாவில் இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
பிரமாண்டமாக நடந்த குணசேகரன் வீட்டு திருமணம்
திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஆர் எஸ் முருகனின் மகனுக்கும் பிரபல நடிகர், எழுத்தாளர் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த வேல ராம மூர்த்தியின் பேதி வைஷ்னவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்க பூவால் செய்யப்பட்ட மாலையை மணமக்கள் அணிந்திருந்தனர். மணமகள் தன்னுடைய தலையில் தங்கத்தால் ஆன முல்லை பூவை சூடி இருந்தார். அத்துடன் மணமக்கள் கிட்டத்தட்ட 600 சவரன் நகையை அணிந்திருந்தார்கள். திருமணம் மிகவும் பிரமாண்டமாக. ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டத்தோடு நடந்து முடிந்துள்ளது. திருநெல்வேலியில் உள்ள ட்ரேட் சென்டர் பல லட்சம் செலவு செய்து ஒரு திருமண மண்டபத்தையே செட்டாக அமைத்து நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
பாரம்பரிய முறைப்படி சித்தார்த் - அதிதி இரண்டாவது முறையாக திருமணம்
கடந்த மார்ச் மாதம் நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ஆகியோர் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் தெலுங்கானாவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களது நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் எளிமையான திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தற்போது ராஜஸ்தான் பாரம்பரிய முறைப்படி அங்குள்ள பிசான்கார் பகுதியில் உள்ள அரண்மனையில் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயம் ரவி - ஆர்த்தி
ஸ்டார் தம்பதிகளான நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோர் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகிய இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படாதநிலையில், வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய சீரியலில் நடிக்கு அயலி வெப்சீரிஸ் நடிகை
ஜீ தமிழில் ஒளிபரப்பான வெப்சீரிஸ் ஆன அயலி தொடரில் நடித்த நடிகை அபி நட்சத்திரா, சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னம் என்ற சீரியலில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் 2 தொடரில் நாயகனாக நடித்த பரத்குமார் நடிக்கிறார். சன்டிவியில் டாப் டிஆர்பியில் இருந்து வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் முடிவடையும் நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி முதல் அன்னம் சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது
விபத்தில் சிக்கிய கந்தாரா படக்குழு
கன்னட படமான கந்தரா ரசிகர்களை கவர்ந்து வெற்றியை பெற்ற நிலையில், இதன் அடுத்த பாகம் கந்தாரா சேப்டர் 1 என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வரும் இந்த படத்தின் படக்குழுவினர் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. படப்பிடிப்புக்காக ஜூனியர் கலைஞர்களைக் ஏற்றிக்கொண்டு, சென்ற மினி பேருந்து கர்நாடக மாநிலம் கொல்லூர் அருகே உள்ள ஜட்கல் பகுதியில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. பேருந்தில் 20 பேர் இருந்த நிலையில், இதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சித்தார்த்தின் மிஸ் யூ ரிலீஸ் தள்ளி வைப்பு
அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது சித்தார்த் நடித்திருக்கும் மிஸ் யூ பட தயாரிப்பாளர் சாமுவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து
பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது
திருப்பதியில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்
சூர்யா இல்லாமல் திருப்பதிக்கு சிங்களாக வந்து ஏழுமலையானை சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஜோதிகா. அதிகாலையிலேயே அவர் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசையும் பெற்றுக்கொண்டார். இதுதொடர்பான் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
புஷ்பா பட நடிகர் மீது பாலியல் வழக்கு
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் கதாபாத்திரத்திலும், புஷ்பா படத்திலும் நடித்த நடிகர் மீது பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து அவரிடம் நகை மற்றும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாக மோசடி புகார் அளித்துள்ளார்.
ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்
கடந்த சில நாள்களாக தனது திருமணம் குறித்த தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் "5 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததுக்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கிறது. இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.