விவாகரத்து பட்டியலில் இணையும் நீலாம்பரி.. உண்மையை போட்டு உடைத்த ரம்யா கிருஷ்ணன் கணவர்!
Oct 19, 2024, 09:53 PM IST
நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது காதல் கணவர் கிருஷ்ண வம்சியை விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், இந்த விவகாரம் குறித்து அவரது கணவர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980களிலேயே அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன், இவர் வெள்ளை மனசு, பாறை, பட்ஜெட் பத்மநாபன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்தது, இவர் ஏற்று நடித்த அம்மன் வேடம் தான். சிறு வயதிலேயே நாட்டியம் பயின்ற இவர் அம்மன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து அசத்தியிருப்பார்.
நீலாம்பரியாக நிலைத்து நிற்கும் ரம்யா கிருஷ்ணன்
இவரின் தீர்க்கமான நடிப்பை பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் படையப்பா படத்தில் அவரை நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, நடிப்பில் ரஜினியுடன் போட்டிப் போட்டு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் ரம்யா கிருஷ்ணன், அதனால், இப்போது வரை அந்தப் பெயரை குறிப்பிட்டாலே ரம்யா கிருஷ்ணன் நினைவிற்கு வந்துவிடுவார். அவரைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாப்பாத்திரத்தில் பொருத்திப் பார்க்கக் கூட முடியாத அளவு நடிப்பில் அசத்தியிருப்பார்.
சினிமாவில் வளர்ச்சி
குணச்சித்திர நடிகை, கதாநாயகி, வில்லி, காமெடி நடிகை என அனைத்து கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
திருமணம்
இப்படி நடிப்பில் தீவிரம் காட்டி வந்த இவர், இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் ரம்யா கிருஷ்ணன் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார். பின் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதாவாக நடித்து இந்திய அளவில் மீண்டும் தன் நடிப்புத் திறமையை நிரூபித்திருப்பார். இந்தப் படத்தை் தொடர்ந்து சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் ரம்யா கிருஷ்ணன்.
பரவும் வதந்திகள்
இந்த நிலையில் தான் நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவரது கணவர் கிருஷ்ண வம்சியும் பல நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தது.
விளக்கமளித்த வம்சி
இதையடுத்து, ரம்யா கிருஷ்ணனின் கணவர் இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார். அதில், படப்பிடிப்புகளுக்காக தான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார், நாங்கள் தனித்தனியாக இருப்பதால்தான் இந்த வதந்திகள் உருவாகியிருக்கும். இப்படி வதந்திகளைப் பரப்புவது சாடிசம். இவற்றைப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை என உறுதியாக கூறினார்.
வதந்தி பரப்பியவர்களை கிண்டல் செய்த வம்சி
மேலும் பேசிய அவர், தங்கள் மீதுள்ள அன்பினால்தான் இப்படி வதந்திகளை உருவாக்குகிறார்கள். ஐயோ கிருஷ்ண வம்சியும், ரம்யா கிருஷ்ணனும் பிரிந்து வாழ்கிறார்களே என்று வருத்தப்பட்டு இப்படிச் செய்திருப்பார்கள் என வதந்தி பரப்பியவர்களை கிண்டலடித்தார்.
இருவரும் சமீபத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாததால், இந்த வதந்திகள் பிறந்திருக்கலாம், தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வருகிறோம். ஆனால் அந்தப் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்த வம்சி
நாங்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். வீட்டுக்குச் சென்றால் எங்கள் உலகம் வேறு. ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை மிகவும் நேசிப்பவர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர். அதே நேரத்தில் மிகவும் புத்திசாலி, எல்லா விஷயங்களிலும் மிகவும் சாதுர்யமாகவும், கூர்மையாகவும் இருப்பார் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் வம்சி.
டாபிக்ஸ்