96 Movie: நீங்க நினைக்குறது இருக்காது... 2ம் பாகம் அப்டேட்டில் ஷாக் கொடுத்த டேரக்டர்
Sep 26, 2024, 02:48 PM IST
96 Movie: 96 திரைப்படத்தின் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் நிச்சயம் காதல் சார்ந்த திரைப்படமாக இருக்காது என அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் கூறியுள்ளார். இது 96 படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சினிமாவையும் காதலையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. அதிலும், மிக சாதாரணமாக, எளிய மக்களையும் கடத்தி செல்லும், கலாச்சாரம், நாகரிகம், அழகியல், வலி என அனைத்தையும் ஒரு மெல்லிய கோடாக ஒரு படம் சொல்கிறது என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்காதா என்ன?
96- 90'ஸ் கிட்களின் காவியம்
அப்படி, காதல், பிரிவு, வலி, ஏக்கம், ஆசை என அனைத்தையும் ஒருசேர அளித்து சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது 96.
இந்தப் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பள்ளி கால காதலை மையப்படுத்திய இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக அமைந்ததுடன் விஜய் சேதுபதிக்கும், திரிஷாவிற்கும் கெரியர் ஹிட் கொடுத்து அவர்களின் மவுசை மேலும் அதிகரித்தது.
எப்போது 2ம் பாகம்
பின்னணி இசை பாடல்கள், காட்சிகள் என அனைத்திலும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். இந்தப் படத்தை தங்களுக்கான படமாகவே எண்ணி கொண்டாடினர் 90'ஸ் கிட்கள்.
அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் 2ம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியை ரசிகர்களே தொடர்ந்து கேட்ட வண்ணமே இருந்தனர். ஆனால், இந்தப் படத்தின் 2ம் பாகம் எடுப்பதில் இப்போது உடன்பாடில்லை எனக் கூறிய இயக்குநர் பிரேம் குமார் தற்போது அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது, நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணியில் மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியுள்ள பிரேம் குமார் இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில், மெய்யழகன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பிரேம் குமார் தான் 96 திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்து யோசித்துள்ளேன்.
முதலில் இந்தப் படத்தை எடுக்க வேண்டாம் என நினைத்தேன். பின் இதற்கான கதையை எழுதியதும் எனக்கே இந்தப் படத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. எனவே, 96 படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
இது காதல் படம் அல்ல
இந்நிலையில், செய்தியாளர் 96 முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் காதலை மையப்படுத்தி இருக்குமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரேம் குமார். இல்லை. 96 படத்தின் 2ம் பாகம் காதலை மையப்படுத்தி இருக்காது. 2ம் பாகத்திற்கான கதை குடும்ப அமைப்பை சுற்றி நடக்கும் வண்ணம் எழுதியுள்ளேன்.
மேலும், இந்தப் படம் குடும்ப பிரச்சனைகளை பேசும் ஓர் உணர்வுப் பூர்வமான கதையாக இருக்கும். முதலில் மெய்யழகன் திரைப்படத்தின் பணிகள் முழுவதுமாக முடிந்து திரையிட வேண்டும். பின்னரே இது குறித்த முடிவகள் எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த நிலையில், காதலே காதலே தனிப்பெரும் துணையே என 96 படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.