HBD Harris Jayaraj: மறக்கமுடியாத மின்னலே தீம்..90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி கிங் ஆன கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Harris Jayaraj: மறக்கமுடியாத மின்னலே தீம்..90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி கிங் ஆன கதை!

HBD Harris Jayaraj: மறக்கமுடியாத மின்னலே தீம்..90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி கிங் ஆன கதை!

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 07:34 AM IST

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

49ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜ்
49ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹாரிஸ் ஜெயராஜ்

யார் இந்த ஹாரிஸ் ஜெயராஜ்? இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எஸ்.எம். ஜெயகுமார் - ரேச்சல் ஜெயகுமார் தம்பதியினருக்கு, ஜனவரி 8, 1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

தனது மகன் ஹாரிஸ் ஜெயராஜை பெரிய பாடகராக ஆக்க வேண்டும் எனும் எண்ணம் அவரது தந்தை எஸ்.எம். ஜெயகுமாருக்கு இருந்தது. ஏனெனில் அவர், மலையாள இசையமைப்பாளர் ஷியாமிடம் கிடாரிஸ்ட் ஆகப் பணிபுரிந்தவர். இந்த இசைப் பாரம்பரியத்தின் காரணமாக, ஹாரிஸ் ஜெயராஜ் தனது ஆறு வயது முதல் கர்நாடக சங்கீதம் படிக்க அனுப்பப்பட்டார்.

அதேபோல், 13வயதுக்குள்ளாகவே, லண்டனின் புகழ்பெற்ற டிரினிட்டி இசைக்கல்லூரியில் 8 கட்ட பரீட்சையை மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றார், ஹாரிஸ் ஜெயராஜ்.

தனது 12 வயது முதல் ஒரு பிராப்பர் இசையமைப்பாளராக வேண்டும் என்னும் நோக்கில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவின்கீழ் கிடார் கலைஞராக தனது பயிற்சியைத் தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், பல்வேறு மொழி இசையமைப்பாளர்களிடம் இசை புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார். 1987ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ராஜ்-கோடி, சிற்பி, ஆதித்யன், ஷியாம், ஓசேப்பச்சன், வித்யாசாகர்  எனப் பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ். அதேபோல் அக்காலகட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அப்போது தான், நடிகர் விஜய் நடித்த கோகோ கோலா விளம்பரத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜை பற்றி பலரும் கோலிவுட் வட்டாரத்தில் பேசத் தொடங்கினர்.

நான் ரசித்த ஹாரிஸ் ஜெயராஜ்:

  • கெளதம் மேனன் தனது முதல் படமான 'மின்னலே’-க்கு ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டிருக்கையில் பழக்கம் ஆனவர் தான், ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசைத்திறனைக் கண்டு வியந்துபோன கெளதம், ஹாரிஸை தனது முதல் படத்தில் இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார். இந்த கூட்டணியில் 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே, அதன் தீம் மியூஸிக்கிற்காகவும் ஒட்டுமொத்த ஆல்பத்திற்காகவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளைத்தைப் பெற்றது.
  • அதனைத் தொடர்ந்து ’மஜ்னு’ படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் அதிலும் தனது தனித்துவமான தீம் மியூசிக்கை கொடுத்திருப்பார். அப்படத்தில் இடம்பெற்ற முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய், குல்மோகர் மலரே ஆகியப் பாடல்கள் இன்றும் பலரது ஃபேவரைட் பாடல்களாகும். அடுத்து இவர் இசையமைத்த 12 பி-யும் பலரால் கவனிக்கப்பட்டது. 
  • 2002ஆம் ஆண்டு வெளியான சாமுராய் படம் பெரியளவில் திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும், இன்றும் அதனை நினைவுகூர வைக்க முதன்மைக் காரணம், ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு ஒரு சாட்சி, ஆகாய சூரியனை பாட்டில் இடையில் போர்புரிவது போன்ற காட்சியில் வரும் சேஞ்ச் ஓவர், ’உன்னைக் கண்டதும் நான் ஏன்’ என்னும் வரிகள் வரும்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிரட்டியிருப்பார்.
  • 2003ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படம் ஹாரிஸ் ஜெயராஜின் கேரியரில் முக்கியமான படமாகும். ஒரு அதிரடி ஆக்‌ஷன் சென்டிமென்ட் கலந்த ஹரியின் படத்தில் பலவிதமான இசையினை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்திருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் இடம்பெற்ற ‘இதுதானா இதுதானா’ என்னும் பாடல், இன்றைய தலைமுறை பெண்பார்க்கும் படலம் குறித்தான வீடியோ மேக்கிங்கில் பின்னணி இசையாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பின், ஹரி- ஹாரிஸ் காம்போவில் வந்த ’கோவில்’ படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதிலும் 'சிலுசிலுவென தென்றல்' சிரிக்குது பாடலில், 'வேப்பங்குளத்துக் கிளியே என் மனச உடைச்ச உளியே’என்னும் வரிவரும்போது, சடாரென ஒரு மெலடியைப் போட்டிருப்பார், ஹாரிஸ். அது இன்றும் கேட்கையில் கூஸ் பம்ப்ஸ் மொமன்ட் தான்.
  • பின் ஷங்கருடன் கைகோர்த்த ஹாரிஸ் ஜெயராஜ், அந்நியன் படத்தின் இசைக்காகவும், கஜினி படத்தின் இசைக்காகவும் தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை வென்றார்.
  • தற்போது எஸ்.கே.வுக்கு ஒரு அனிருத் போல, நடிகர் சூர்யாவுடைய திரைவாழ்வு லிஃப்ட் ஆனதுக்கு ஹாரிஸ் ஜெயராஜும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ‘காக்க காக்க’-வில் தொடங்கிய அப்பயணம், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், ஏழாம் அறிவு, மாற்றான் வரை தொடர்ந்தது. அதிலும் மனிதன், ’வாரணம் ஆயிரம்’ படத்தில் மிகவும் மெனக்கெட்டு இசையமைத்திருப்பார். குறிப்பாக, டெல்லியில் குழந்தை ஆதித்யாவை மீட்கச் செல்லும் சூர்யா, ரவுடிகளிடம் சண்டையிடும் காட்சிகள் மிகுந்த பரபரப்புடன், அந்த மூடுக்கு நம்மை இட்டுச்செல்லும் வகையில் இசையமைத்திருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ். 
  • அதேபோல கோ, ஒரு கல் ஒரு கண்ணாடி, என்றென்றும் புன்னகை, என்னை அறிந்தால், அநேகன், இருமுகன், வனமகன் ஆகியப் படங்களில் பல பாடல்களை ஹிட் பெறச்செய்தது, ஹாரிஸ் ஜெயராஜின் இசை தான்.
  • தான் 50ஆவதாக இசையமைத்த வனமகன் படம், ரிலீஸின்போது சரியாக கவனிக்கப்படவில்லை என்ற வருத்தம் ஹாரிஸுக்கு இருந்திருக்கலாம். ஆனால், அதில் இடம்பெற்ற ‘’சிலுசிலுவென்று பூங்காத்து மூங்கிலில் மோத’’ என்னும் பாடல், காலம்கடந்து ரீல்ஸ் மூலம் ஹிட்டடித்தது. அதனை ட்ரெண்ட் ஆக்கியவர்கள் இன்றைய 2கே கிட்ஸ் தான். அப்படி, 90ஸ் கிட்ஸ்கள் முதல் 2கே கிட்ஸ்கள் வரை பலரை தனது இசையால் கட்டிப்போட்ட மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.