Meiyazhagan Review : ‘என்ன ஆனது கத்தரிக்கோல்? எங்கே போனது கடிகாரம்?’ ‘மெய்யழகன்’ மெய்யாலுமே எப்படி? முழு விமர்சனம்!
Meiyazhagan Review : ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது’
Meiyazhagan Review : 96 படத்தை இயக்கிய ப்ரேம் குமார் இயக்கத்தில், அர்விந்த் சாமி, கார்த்தி நடிப்பில், சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். போஸ்டர், ட்ரெய்லர் இவையெல்லாம் பார்த்து, ‘படம் அப்படி இருக்கலாம்.. இப்படி இருக்கலாம்..’ என்று பலர், பலவிதமாக கணக்கு போட்டிருப்பார்கள். அந்த கணக்கு சரிதானா? படம் எப்படி என்பதை, ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சியை முடித்த கையோடு, மெய்யழகன் திரைப்படத்தின் விமர்சனத்தை வழங்குகிறோம்.
சொல்ல வந்த கதை இது தான்
சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்லும் அர்விந்த்சாமியின் குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து, சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார். அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தி உடன், அர்விந்த்சாமி பழக நேர்கிறது. கார்த்தியின் பெயர் கூட தெரியாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அவருடன் பழகும் அர்விந்த்சாமி, இறுதியில் தன்னை தெய்வமாக பாவிக்கும் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வில், அந்த இரவு முடிந்து விடியும் போது, சென்னை வந்துவிடுகிறார். அதன் பின் கார்த்தியின் பெயர் மெய்யழகன் என்பதை அறிந்து, டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
பக்கம் பக்கமாக வசனங்கள்
இப்போது சொன்னது தான் கதை. இதை கேட்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் பார்க்கும் போது? 3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால தூரத்தில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது செலவே இல்லை; ஆனால், காகிதங்களுக்கு பெரிய அளவில் செலவாகியிருக்கும். அந்த அளவிற்கு டயலாக்..!
உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான்.. ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? அர்விந்த்சாமிக்கு தேவதர்ஷினி ஜோடி என்கிற முதல் நெருடல், ராஜ்கிரணை விட ஜெயபிரகாஷ் மூத்தவர் என்கிற இரண்டாவது நெருடல், தங்கை பாசத்திற்காக வந்தவர், அந்த தங்கையின் திருமணத்தை கூட பார்க்காமல் பறப்பது மூன்றாவது நெருடல், இப்படி பல நெருடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
என்ன சொல்ல நினைத்தார்கள்?
டெல்டா இளைஞராக கார்த்தி அப்படியே கச்சிதமாக இருக்கிறார். உடை, நடை, சிகை என எல்லாமே அவருக்கு சிறப்பா இருந்தது. அதே போல அர்விந்த் சாமியின் நடிப்பும் அருமை. ஆனால், அதையே 3 மணி நேரம் பார்ப்பது என்றால்? அங்கு தான் பிரச்னை! சொல்ல வந்ததை சொல்லாமல், சொல்லலாம் என நினைத்ததை எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு வீட்டில் பெரியார் போட்டோ, முருகன் போட்டோ என தலைக்கும் காலுக்கும் சம்மந்தமே இல்லாத பல காட்சிகள்!
திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம், படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது. அப்படியே 96 படத்தின் டெம்ப்ளேட்டை எடுத்து, இந்த படத்திலும் அதையே செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், காதல் எடுபட்ட அளவிற்கு, சிறுவயது பாசம் எடுபடவில்லை.
அத்தனை கதாபாத்திரங்களும் வீணடிப்பு
டி-ஏஜிங் செய்தவர் போல காணப்படும் ராஜ்கிரண், ஒரு முறை பலகாரம் எடுத்து வர பயன்படுத்தப்பட்ட இளவரசு, அழுவதற்காகவே ஒரு மேடையில் பயன்படுத்தப்பட்ட அழகான தங்கை, இடைவேளைக்குப் பின் இதமாக இரு காட்சிகளில் வரும் ஸ்ரீதிவ்யா, ஒரே ஒரு முறை பட்டு வேட்டியுடன் பட்டும் படாமல் வந்து போகும் துரோக உறவினர்கள், இவர்களுக்கு எல்லாம் காட்சி எங்கே? கேமரா முழுக்க அர்விந்த் சாமியும்- கார்த்தியுமாக நிரப்பிவிட்டார்கள். அதுவே படத்தின் ப்ளஸ் ஆகவும், பல இடங்களில் மைனஸாகவும் மாறிவிட்டது.
2 மணி முதல் 2:30 மணி நேரத்திற்குள்ளாக சொல்லியிருந்தால், இன்னும் கூட ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், வம்பாக 3 மணி நேரத்திற்கு கதையை நகர்த்தி, அதுவும் இருவரை மட்டுமே காட்சிகளாக வைத்து நகர்த்தி, இயக்குனர் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். அப்போ படத்தில் ப்ளஸ் பாய்ண்ட் இல்லையா? நிறைய இருக்கிறது. அதை குறைகள் பல மறைக்கிறது. படத்தில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. ஆனால், அதை விட பெரிசு, அதை பார்க்க வருவோரின் பணம்! அதற்கு நியாயம் செய்திருக்கிறார்களா என்றால், மெய்யாலுமே மெய்யழகன் கொஞ்சம் சொதப்பல் தான்!
டாபிக்ஸ்