WPL 2024 Final: நெருப்புடா..! 16 ஆண்டு கால கனவு - ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட ஸ்மிருதி மந்தனாவின் ஆர்சிபி மகளிர் அணி
Mar 18, 2024, 12:53 AM IST
ஆர்சிபி அணியின் நீண்ட நாள் கோப்பை கனவை மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் படை நனவாக்கியுள்ளது. ஐபிஎல் தொடங்கி 17வது ஆண்டில் இது நடந்துள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக் இரண்டாவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய இறுதிப்போட்டியில் ஆர்சிபி மகளிர் அணி சாதித்துள்ளது
மகளிர் ப்ரீமியல் லீக் 2024 தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனான இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணியான ஆர்சிபி முதல் முறையாக பைனலில் விளையாடுகிறது. இந்த போட்டியில் யார் வென்றாலும் முதல் முறை ஐபிஎல் கோப்பையை வெல்வார்கள் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 113 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதை சேஸ் செய்த ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக ஐபிஎல் கோப்பைக்கு முத்தமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி ஒரு முறை கூட சாம்பியன் ஆகாத ஆர்சிபி அணியின் 16 ஆண்டு கால கனவை, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி நனவாக்கியுள்ளது.
டெல்லி பேட்டிங்
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஓபனர்களான மெக் லேனிங், ஷெபாலி வர்மா ஆகியோர் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர்.
டெல்லியின் ஆட்டத்தை வைத்து பார்க்கையில் மிகப் பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி மகளிர் அணி பவுலிங்கில் விஸ்வரூபம் எடுத்தது.
அதிரடியாக பேட் செய்து வந்த ஷெபாலி வர்மா 27 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார். இவரைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த அணியின் முக்கிய பேட்டர்களான ஜெமிமா ரோக்ரிக்ஸ், ஆலிஸ் கேப்சி ஆகியோர் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இவர்கள் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி ஷாக் கொடுத்தார் ஆர்சிபி பவுலர் சோபி மோலினக்ஸ்.
இதன் பிறகு டெல்லி அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்து வந்த பேட்டர்கள் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர். சிறப்பாக பேட் செய்து வந்த ஓபனரும், அணியின் கேப்டனுமான மெக் லேனிங் 23 ரன்களில் அவுட்டானார்.
அவ்வளவுதான், டெல்லி அணி 18.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
கலக்கிய ஆர்சிபி பவுலர்கள்
சிறப்பாக பந்துவீசிய ஆர்சிபி பவுலர்கள் டெல்லி பேட்டர்களை ரன் அடிக்க விடாமல் நெருக்கடி தந்து, அவர்களது விக்கெட்டுகளையும் தூக்கினர். ஷ்ரயேங்கா பாட்டீல் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஷா சோபனா, சோபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆர்சிபி அற்புத சேஸிங்
இந்த எளிய இலக்கை விரட்டிய ஆர்சிபி மகளிர் அணிக்கு சிறப்பான தொக்கத்தை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவின் ஆகியோர் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 49 ரன்கள் சேர்த்தனர்.
டெவின் 31, மந்தனா 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்கள். நிதானமாக பேட் செய்து ரன் சேஸிங்கில் ஈடுபட்ட டெவின் 35 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணி 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்று முதல் முறையாக மகளிர் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.