தமிழ் செய்திகள்  /  Cricket  /  Delhi Capitals Beat Gujarat Giants By 7 Wickets In Last League Of Wpl 2024

WPL 2024: ஷெபாலி வர்மா அதிரடி! சம்பிரதாய போட்டியிலும் ஆதிக்கம் - குஜராத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 13, 2024 11:00 PM IST

சம்பிரதாயமாக நடைபெற்ற போட்டியிலும் மகளிர் பேட்டிங், பவுலிங் என ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேபிடல்ஸ், 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியை வீழ்த்தியது

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டெல்லி பேட்டர் ஷெபாலி வர்மா
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டெல்லி பேட்டர் ஷெபாலி வர்மா (WPL-X)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த சீசன் முழுவதிலும் மோசமாக விளையாடிய அணியாக குஜராத் உள்ளது. இதையடுத்து இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணி பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பாரதி ஃபுல்மாலி நிதானமாக பேட் செய்து 42 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக கேத்ரின் பிரைஸ் 28 ரன்கள் எடுத்தார். மொத்தம் நான்கு பேர் மட்டுமே குஜராத் அணியில் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர்.

டெல்லி பவுலர்களில் மரிசான் கேப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

டெல்லி வெற்றி

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி கேப்டல்ஸ் 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஓபனிங் பேட்டரான ஷெபாலி வர்மா அதிரடியாக பேட் செய்து 37 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். இவர் தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களை அடித்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பவுலர்களில் தனுஜா கன்வார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

8 போட்டிகள் விளையாடியிருக்கும் டெல்லி கேப்டல்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

குஜராத் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எலிமினேட்டர் போட்டி

இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்ளும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் எலிமினேட்டர் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த மோதலில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

அத்துடன் இதுவரை இவ்விரு அணிகளும் நான்கு முறை மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்த சீசனில் மும்பை அணி விளையாடி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி மகளிர் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point