அடுத்த சுற்று வாய்ப்பு..பெரிய வெற்றியை பெறும் கட்டாயத்தில் இந்திய மகளிர்! தலைவலியாக இருக்கும் ஒற்றை பேட்டர் யார்?
Oct 09, 2024, 11:00 AM IST
அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவதற்கான முக்கிய போட்டியாக இன்று நடைபெறும் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டி அமைகிறது. இதில் மிக பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் உள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று வரும் இந்த தொடரில் இந்தியா மகளிர் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா மகளிர், நியூசிலாந்து மகளிர், பாகிஸ்தான் மகளிர், இலங்கை மகளிர் ஆகிய அணிகள் உள்ளன.
இதையடுத்து இந்தியா மகளிர் தனது மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் இந்திய நேரடப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மகளிர் தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய தோல்வியை தழுவியது.
இதன் பின்னர் தனது இரண்டாவது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக மோதியது.
பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனவே இலங்கைக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல், மிக பெரிய வெற்றியை பெற்று கூடுதல் ரன்ரேட்டை பெற்றால் மட்டுமே இந்தியா மகளிர் டாப் 2 இடத்துக்கு முன்னேற முடியும்.
இந்தியா மகளிருக்கு சவால் தரும் சமாரி அட்டப்பட்டு
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், முதல் வெற்றியை எதிர்நோக்கி இலங்கை மகளிர் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டனும், ஃபார்மில் இருக்கும் பேட்டருமான சமாரி அட்டப்பட்டு, இந்திய மகளிர் அணிக்கு கடும் சவால் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியின்போது முக்கிய பங்களிப்பு ஆற்றிய சமாரி அட்டப்பட்டு, இந்திய மகளிர் அணியிடமிருந்து வெற்றியை பறித்து சென்றார். எனவே அவரது விக்கெட் என்பது இந்திய மகளிர் அணியில் முக்கிய குறியாக இருக்கும்.
அணிக்கும் திரும்பும் பூஜா வஸ்த்ராகர்
சிறிய காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத இந்திய மகளிர் அணியின் மித வேகப்பந்து வீச்சாளரும், பவுலிங் ஆல்ரவுண்டருமான பூஜா வஸ்த்ராகர் இந்த போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கழுத்தில் வலி ஏற்பட்டதால் பாதியிலேயே ரிட்டையர்ட் ஹர்ட் ஆன ஹர்மன்ப்ரீத் கெளர், இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற் தகுதியுடன் உள்ளாராம்.
ஸ்டார் பேட்டரான ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காத நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியா மகளிர் - இலங்கை மகளிர் டி20 போட்டிகளில் இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா மகளிர் 19, இலங்கை மகளிர் 5 போட்டிகளில் வென்றுள்ளன. முந்தைய ரெக்கார்டுகளை வைத்து பார்க்கையில் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இந்தியா மகளிர் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் இலங்கை மகளிர் தனது வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். அதே சமயம் போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இந்தியா மகளிர் அணி முனைப்பு காட்டும்.
இரு அணிகளும் இந்த போட்டியில் மிக பெரிய வெற்றியை பெறுவதோடு, அடுத்தடுத்த போட்டிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக இருக்கும் இந்த போட்டியில் இந்தியா மகளிர், இலங்கை மகளிர் அணிகள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டாபிக்ஸ்