HBD Harmanpreet Kaur: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிங்கப் பெண்! வெற்றிகரமான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பிறந்தநாள்
வீரேந்தர் சேவாக்கை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்த ஹர்மன்ப்ரீத் கெளர், அவரைப் போலவே அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவதில் வல்லவராக இருந்து வருகிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஹர்மன்ப்ரீத் கெளர். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் அணியின் தற்போதைய கேப்டனாக இருந்து வரும் இவர், வெற்றிகரமான கேப்டனாகவும் வலம் வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஓபனர் வீரேந்தர் சேவாக் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஹர்மன்ப்ரீத் கிரிக்கெட் விளையாட்டில் பள்ளிப்படிப்பின்போதே தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், மகளிர் உலகக் கோப்பை 2009 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீராங்கனையான தனது 20 வயதில் களமிறங்கினார். தொடர்ந்து அதே ஆண்டில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அறிமுகமானார்.
சேவாக் போல் அதிரடியான பேட்டிங்காலும், விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டும் அணிக்கு பங்களிப்பை வழங்கி வந்த இவர் முக்கிய பேட்டராக நிலையான இடத்தை பிடித்தார். அதேபோல் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் சிறந்த பங்களிப்பை அளித்தார்.
2012ஆம் ஆண்டு மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த மிதாலி ராஜ், துணை கேப்டனாக இருந்த ஜுலன் கோஸ்வாமி காயத்தால் விளையாட முடியாமல் போனது. மிகவும் முக்கியமான போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஹர்மன்ப்ரீத் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்ததுடன், ஆசிய கோப்பையும் வென்று கொடுத்தார்.
2018ஆம் ஆண்டில் மிதாலி ராஜ் ஓய்வுக்கு பின்னர் இந்திய மகளிர் அணியின் முழு நேர கேப்டன் ஆனார். கேப்டன்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 2018 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இவர், நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக சதமடித்து, டி20 மகளிர் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையை பெற்றார்.
வெளிநாட்டு பிரான்சைஸ் கிரிக்கெட் தொடரான மகளிர் பிக் பேஷ் லீக்கில் ஒப்பந்தமான முதல் இந்தியராக இருந்து வரும் ஹர்மன்ப்ரீத், இந்திய மகளிர் அணியில் அதிக போட்டியில் விளைாடியாடியவர், அதிக டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்டர் என பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனா விருது, மகளிர் பிக் பேஷ் 2021-22 சீசனில் தொடர் நாயகி, கேப்டனாக மகளிர் டி20 ஆசிய கோப்பை, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்காக சாம்பியன் பட்டம், காமன்வெல்த் கிரிக்கெட்டில் வெள்ளிப்பதக்கம், ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றும் சாதித்துள்ளார்.
தற்போது வரை இந்திய மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்டராக இருந்து வருகிறார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீராங்கனைகள் மூன்று பேரில் ஒருவராக உள்ளார்.
இந்திய மகளிர் அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், ஆக்ரோஷம் மிக்க வீராங்கனையாகவும் இருந்து வரும் ஹர்மன்ப்ரீத் கெளருக்கு இன்று பிறந்தநாள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய மகளிர் அணியின் சிங்கப்பெண்ணாகவே இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்