India Women Creates History: வீரேந்தர் சேவாக் ஆக மாறிய ஷெபாலி வர்மா! ஒரே நாளில் அதிக ரன்கள் அடித்து இந்திய மகளிர் சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் வீரேந்தர் சேவாக் ஆக மாறிய ஷெபாலி வர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அத்துடன் ஒரே நாளில் அதிக ரன்கள் அடித்து இந்திய மகளிர் அணி மற்றொரு சாதனை புரிந்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் தென் ஆப்பரிக்கா மகளிர் அணி ஒரு நாள், டெஸ்ட், டி20 என இந்திய மகளிர் அணிக்கு எதிராக மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பெங்களுருவில் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வென்ற இந்தியா மகளிர் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா ரன் குவிப்பு
இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட் செய்த இந்தியா மகளிர் அணிக்கு மிகப் பெரிய தொடக்கத்தை ஓபனர்களான ஷெபாலி வர்மா - ஸ்மிருத்தி மந்தனா ஆகியோர் தந்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 51.6 ஓவர்களில் 292 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வெள்ளை பந்து கிரிக்கெட் போல் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஓபனரான ஷெபாலி வர்மா. 20 வயதாகும் ஷெபாலி 194 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது அதிவேக இரட்டை சதம் என்ற சாதனையாக அமைந்துள்ளது. இந்திய ஆண்கள் அணியின் அதிரடியான ஓபனராக இருந்த வீரேந்தர் ஷேவாக் ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக ஷெபாலியின் பேட்டிங் அமைந்திருந்தது. .
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 98 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்திருந்தது. இதைதத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய மகளிர் 115.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தென் ஆப்பரிக்கா நிதானம்
இதன் பின்னர் தனது முதன் இன்னிங்ஸை தொடர்ந்த் தென் ஆப்பரிக்கா மகளிர் அணி, இந்தியா போல் அல்லாமல் நிதானமான ஆட்டத்தை கடைப்படித்தது. இதன் விளைவாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 72 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளளது.
அந்த அணியின் நான்காவது பேட்டராக களமிறங்கிய மரிசான் கேப் 69 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்திய பவுலர்களில் ஸ்நேக் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீப்தி ஷர்மா ஒரு விக்கெட்டை எடுத்தார்.
சச்சின் டென்டுல்கர் பாராட்டு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரின் சிறப்பான ஆட்டத்தை, இந்தியா அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டென்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "முதல் நாளில் நம் பெண்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஷெபாலி வர்மா இரட்டை சதம், ஸ்மிருத்தி மந்தான 149 ரன்கள் இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் அருமையாக இருந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள்
மகளிர் கிரிக்கெட் மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிக ரன்கள் அடித்து இந்திய மகளிர் அணி சாதனை புரிந்துள்ளது. முதலில் நாளில் இந்திய மகளிர் 525 ரன்கள் எடுத்திருந்தது.
இதற்கு முன்னர் 2002இல் வங்கதேசத்துக்கு எதிராக கொழுப்புவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்திருந்ததே ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, கடந்த 1935இல் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இங்கிலாந்து மகளிர் அணி அணி ஒரே நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இந்த இரு சாதனைகளையும் இந்திய மகளிர் அணி முறியடித்துள்ளது
ஒரே நாளில் இரட்டை சதமடித்த மகளிர் பேட்டர்
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் இரட்டை சதம் அடித்த பேட்டர் என்ற சாதனையை இந்தியாவின் ஓபனரான ஷெபாலி வர்மா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னார் இங்கிலாந்து பேட்டரான பெட்டி ஸ்னோபால் அடித்த 189 ரன்கள் ஒரு நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது
ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்
இந்த போட்டியில் இந்திய ஓபனர் ஷெபாலி வர்மா 8 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர் எனவும், ஒரே நாளில் அதிக சிக்ஸர் அடித்தவர் எனவும் பெருமை பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்