TM Krishna: ’இசையிலும் அரசியலா! பெரியார் மீது அவதூறா!’ பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tm Krishna: ’இசையிலும் அரசியலா! பெரியார் மீது அவதூறா!’ பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

TM Krishna: ’இசையிலும் அரசியலா! பெரியார் மீது அவதூறா!’ பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 08:21 PM IST

”முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்”

டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு
டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

சங்கீத கலாநிதி விருது

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசை உலகில் மிக உயரிய விருதாக ‘சங்கீத கலாநிதி’ விருது கருதப்படுகிறது. 

பெரியரை புகழ்ந்து பாடிய டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை வழங்க பல்வேறு கர்நாடக இசை பாடகர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

கர்நாடக இசை பாடகர்கள் எதிர்ப்பு

இது தொடர்பாக கர்நாடக இசை பாடகர்கள் ரஞ்சினி காயத்ரி ஆகியோர் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், டி.எம்.கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெற உள்ளதால் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். கர்நாடக இசை உலகில் டி.எம். கிருஷ்ணா பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளார். 

இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜன்ர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மரியாதைக்குரிய இசை விற்பனர்களை டி.எம்.கிருஷ்ணா அவமதிப்பு செய்துள்ளார். 

இசையில் உள்ள ஆன்மீக உணர்வை கிருஷ்ணா இழிவு செய்துள்ளதுடன் பெரியார் போன்ற ஒருவரை புகழ்ந்து பாடி இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அப்படி பேசி இருப்பது மிகவும் ஆபத்தானது என கூறி உள்ளனர். 

டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் ஆதரவு

இந்த நிலையில் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்நோக்கத்துடன் விமர்சிப்பது வருத்தத்திற்கு உரியது

திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

தந்தை பெரியாரை தேவையில்லாமல் வசைபாடுவது நியாயமல்ல!

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

மியூசிக் அகாடெமிக்கு பாராட்டு

திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

#TMKrishna எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.