Arun Raj: ’ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம்’ - இசையமைப்பாளர் அருண்ராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arun Raj: ’ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம்’ - இசையமைப்பாளர் அருண்ராஜ்

Arun Raj: ’ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம்’ - இசையமைப்பாளர் அருண்ராஜ்

Aarthi V HT Tamil
May 18, 2023 11:22 AM IST

எறும்பு பட பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன் என இசையமைப்பாளர் அருண்ராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எறும்பு
எறும்பு

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கி உள்ளார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இசையமைப்பாளர் அருண் ராஜ் பேசுகையில், '' இயக்குநர் சுரேஷ் படமாக்கிய காட்சிகளை எமக்கு காண்பித்தார். பிடித்திருந்தால் இசையமைக்கவும் என கேட்டுக்கொண்டார். காட்சிகளை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே இப்படத்திற்கு இசையமைக்கலாம் என தீர்மானித்தேன். காட்சிகளும் சொல்ல வந்த விஷயமும் தனித்துவமானதாக இருந்ததால், இசையமைக்க ஒப்பு கொண்டேன். இது சிறுவர்களுக்கான படைப்பாக இருந்தாலும், இது கிராமிய மண் மணம் மாறாத படைப்பும் கூட.

இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததால் பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன். படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. 

ஐந்து பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள். அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்கினர். பாடல்கள் அனைத்தும் எளிமையானதாக இருக்கும். ஆனால் இந்த எளிமையை கொண்டு வருவதற்கு அனைவரும் கடினமாக உழைத்தோம். படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சக்தி ரித்விக் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால் கிராமிய படமாக இருக்கும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் இது ஒரு உலக அளவிலான திரைப்படம். இதற்காகவே இப்படத்திற்கான இசையை சர்வதேச தரத்தில் தான் அணுகி இருக்கிறேன். ஒரு ஈரானிய திரைப்படம்.. துருக்கி திரைப்படம்.. ஐரோப்பிய திரைப்படம்.. ஆகியவற்றை போல் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இணையதளம் மூலம் பிரத்தியேக இசைக் கலைஞரை தேடி கண்டறிந்து அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கான படம் என்பதால் நிறைய குழந்தைகளின் குரலை தேடி பதிவு செய்திருக்கிறோம். சில திரைப்படங்களில் மட்டும் தான் கற்பனை திறனை பயன்படுத்த முடியும். வணிக சினிமாவில் ஒரு எல்லை இருக்கும். ‘எறும்பு’ போன்ற கலை சார்ந்த படைப்புகளில் பணியாற்றுவது மகிழ்ச்சியானதாக இருந்தது. '' என்றார்.

குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக் பேசுகையில்,'' இந்தப் படத்தில் கிராமத்தில் இயல்பாக இருக்கும் சிறுவர்கள். கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் ஒரு மோதிரம் காணாமல் போய்விடுகிறது. அந்த மோதிரத்தை வாங்க அக்கா- தம்பி இருவரும் எப்படி கஷ்டப்பட்டார்கள். அவர்கள் வாங்கினார்களா? இல்லையா? என்பதே ‘எறும்பு’ படத்தின் கதை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரு கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள் என வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்த படத்தில் தான் நான் முதல் முறையாக முயலை பார்த்தேன். தொடக்கத்தில் தயக்கமும், பயமும் இருந்தது. அதன் பிறகு அதனுடன் பழகிவிட்டேன். ஒருமுறை முயல் எனது வலது கையில் கீறி விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பில் புதிய முயலுடன் நடிக்க வேண்டியதிருந்தது. அந்த முயல் மிகவும் கோபமாக இருந்தது. முயலுடன் பழகியதும் மறக்க முடியாததாக இருந்தது. '' என்றார்.

எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், '' வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது. அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.