தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Eps Campaign: 'ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தர அதிமுகவே காரணம்!’ அடித்து சொல்லும் ஈபிஎஸ்!

EPS Campaign: 'ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தர அதிமுகவே காரணம்!’ அடித்து சொல்லும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Apr 05, 2024 08:01 PM IST

”நம்மை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரங்களை எடுத்து வருகிறது. அத்தனை அவதாரத்தையும், உங்கள் துணையோடு தவிடுபிடி ஆக்கி உள்ளோம். அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை அழிக்க ஸ்டாலின் போட்ட திட்டம் அத்தனையும் உங்கள் துணையோடு தூள் தூள் ஆக்கப்பட்டது”

தேர்தல் பரப்புரையில் ஈபிஎஸ்!
தேர்தல் பரப்புரையில் ஈபிஎஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

நாட்டிலே பல கட்சிகள், பல தலைவர்கள் இருந்தாலும், நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள்தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. இங்கு அமர்ந்து இருக்கும் நாம் தான் அவர்களின் வாரிசுகள். இந்த மண்ணில் இருபெரும் தலைவர்கள் தோன்றாமல் இருந்தால் ஏழைகள் ஏழைகளாகத்தான் இருந்திருப்பார்கள். 

சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காகவே வாழ்கின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வந்து ஆட்சி அதிகாரம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. 

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில், போட்டியிடும் வேட்பாளர் அருணாச்சலம் அவர்கள் நல்லவர், திறமையானவர். மக்கள் பிரச்னைகளை தெரிந்தவர். இப்படி அனுபவம் வாய்ந்தவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். 

நம்மை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரங்களை எடுத்து வருகிறது. அத்தனை அவதாரத்தையும், உங்கள் துணையோடு தவிடுபிடி ஆக்கி உள்ளோம். அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை அழிக்க ஸ்டாலின் போட்ட திட்டம் அத்தனையும் உங்கள் துணையோடு தூள் தூள் ஆக்கப்பட்டது. 

அதிமுக அரசு பெருமான்மையை நிரூபிக்கும் போது, அதை எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். 

நான் கோபிச்செட்டிபாளையத்தில் பியூசி படித்து, பவானியில் கல்லூரி படிப்பை முடித்தேன். ஈரோடு மாவட்டத்தில் கள நிலவரம் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். இந்த பகுதி விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. 

நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற 1652 கோடி ரூபாய் ஒதுக்கி 85 சதவீதத்தை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றினோம். ஆனால் எஞ்சிய 15 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் பவானி ஆற்றில் உள்ள உபரி நீர் ஏரிகள், குளங்கள், குட்டைகளை நிரப்பி இருக்கும். 

குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை தரப்படும் என்ற அறிவிப்பை அதிமுக கொடுத்தது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று கொடுத்த அழுத்தில்தான் ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் அரசு கொடுத்து வருகிறது. 

கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மின்கட்டணத்தை மாதம் தோறும் கணக்கிடுவதாக சொன்னார்கள் ஆனால் அப்படி செய்யவில்லை. பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீட்டு வரி நூறு சதவீதம் உயர்ந்துவிட்டது. 

திமுக ஆட்சிக்கு வந்தாலே கரண்ட் கட் வந்துவிடும்; திமுகவுக்கும் மின் வெட்டுக்கும் ரொம்ப தொடர்பு உண்டு. ஆனால் அதிமுக ஆட்சி தடை இல்லாத மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியது. 

அதிமுக ஆட்சியில் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தேசிய அளவில் பல்வேறு விருதுகளை அதிமுக அரசு பெற்றது என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

WhatsApp channel