RR vs PBKS Result: கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சாம் கரன்! பழிதீர்த்த பஞ்சாப் - நான்காவது தொடர் தோல்வியில் ராஜஸ்தான்
கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி சாம் கரன் அரை சதமடித்த, ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக முதல் மோதலில் பெற்ற தோல்விக்கு பழிதீர்த்தது பஞ்சாப். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் நான்காவது தொடர் தோல்வியை பெற்றுள்ளது ராஜஸ்தான்
ஐபிஎல் 2024 தொடரின் 65வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்றது. ராஜஸ்தான் அணியின் இரண்டாவது உள்ளூர் மைதானமாக கவுகாத்தி இருப்பதுடன், இந்த சீசனில் இங்கு நடைபெறும் முதல் போட்டியாக இது அமைந்திருந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும்,பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் இருந்து வந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டாம் கோஹ்லர்-காட்மோர், ரோவ்மன் பவல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக ரியான் பிராக் 48, அஸ்வின் 28 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பஞ்சாப் சேஸிங்
150 ரன்களுக்கு குறைவான இருந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்து கொண்டது. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் சாம் கரன் 63, ரிலி ரோசவ் 22, ஜித்தேஷ் ஷர்மா 22 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் பவுலர்களில் யஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட் எடுத்தார்.
கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்திய கரன்
பஞ்சாப் கிங்ஸ் டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாமல் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதில் ரோசவ் மட்டும் கொஞ்சம் அதிரடி காட்டி 13 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார்.
48 ரன்களில் முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப். அப்போது களத்தில் இருந்த சாம் கரன் பொறுப்புடன் பேட் செய்தார். விக்கெட் சரிவை தடுத்து ரன் ரேட்ட உயர்த்தினார். சாம் கரனுடன் இணைந்த ஜித்தேஷ் ஷர்மா பார்ட்னர்ஷிப் அமைத்தார். 22 ரன்களில் ஜித்தேஷ் ஷர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக பேட் செய்த கரன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 41 பந்துகளில் 63 ரன்கள் அடித்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுடோஷ் ஷர்மா 17 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்