HT Election SPL: வெல்வாரா பாஜக வேட்பாளர்?..வரிந்துகட்டும் சிபிஎம், அதிமுக..வெற்றி யாருக்கு? - நாகை தொகுதி கள நிலவரம்!
Nagapattinam Lok Sabha constituency: மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம்.
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் களநிலவரம், வேட்பாளர்கள் பற்றி விவரங்களை நாம் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
மீன்பிடித் தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்களாக கொண்ட நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 29வது தொகுதியாக அமைந்துள்ளது. பட்டியலின வேட்பாளர் போட்டியிடும் தனித் தொகுதியான இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும்.
அதிகபட்சமாக 7 முறை வென்ற இந்திய கம்யூனிஸ்ட்
சுருக்கமாக நாகை என அழைக்கப்படும் இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 4 முறையும் அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2019 நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜ் வெற்றி பெற்றார். எம்.செல்வராஜ் 5 லட்சத்து 22 ஆயிரத்து 892 வாக்குகளையும், அவருக்கு அடுத்த படியாக அதிமுகவின் தாழை ம.சரவணன் 3 லட்சத்து 11 ஆயிரத்து 539 வாக்குகளையும் பெற்றனர். அமமுகவின் செங்கோடி 70,307 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் கோவிந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா உள்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.
வெல்லப்போவது யார்?
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான வை.செல்வராஜ் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக 3 முறை, திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக ஒரு முறையும் இருந்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் பலம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓட்டு வங்கி ஆகியவை இவருக்கு வலுசேர்ப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளராக சுர்ஜித் சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் தலைஞாயிறு. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் இவர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவினரை பொறுத்தவரை புதுமுக வேட்பாளராகவே சுர்ஜித் கருதப்படுகிறார்.
பாஜக வேட்பாளரான எஸ்.ஜி.எம் ரமேஷ் சித்தமல்லியை சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாகை மக்களவைத் தொகுதியின் எம்.பியான எஸ்.ஜி.முருகையனின் மகன் ஆவார். ரமேஷின் தந்தை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். ரமேஷின் மைத்துனர்தான் தற்போது நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருக்கும் செல்வராஜ். எஸ்.ஜி.எம் ரமேஷின் மாமனார் திமுக விவசாய அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன். இப்படி பாரம்பரிய பின்னணி கொண்ட ரமேஷ் பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். உள்ளூர் மக்களின் செல்வாக்கு, அமமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி ரமேஷூக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா சந்திரகுமார் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இருப்பினும் நாகை தொகுதியில் உள்ள பிரச்னைகளை அறிந்து அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறி ஓட்டு சேகரித்து வருகிறார்.
கள நிலவரம் என்ன?
நாகை தொகுதியை பொறுத்தவரை எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் களமிறங்கினாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளே இம்முறை வெற்றியை முடிவு செய்யும் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்