Sellur Raju: ‘ராகுல் ட்விட்டை டெலிட் செய்த செல்லூர் ராஜூ..’ தெர்மாகோலை தூசு தட்டிய நெட்டிசன்கள்!
May 22, 2024, 02:57 PM IST
Sellur Raju: தமிழகத்தில் தங்களின் பிரதான எதிர்கட்சியான திமுக உடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரை, செல்லூர் ராஜூ ஏன் புகழ வேண்டும்? இதற்கு அதிமுகவினர் பலரே, பயங்கர எதிர்வினை ஆற்றினார்கள். இதனால் சமூக வலைதளத்தில் மீண்டும் இடம் பிடித்தார் செல்லூர் ராஜூ.
Sellur Raju: நெஞ்சில் பட்டதை, கொஞ்சமும் பிசகாமல் அப்படியே பேசுவதில் வல்லவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. தெர்மாகோலில் தொடங்கிய அவர் மீதான விமர்சனம், இன்றும் பல மீம் டெம்ப்ளெட்டுகளின் நாயகனாக தொடர்கிறார் செல்லூரார். அவ்வப்போது அவர் அளிக்கும் பேட்டிகளில் சுவாரஸ்யத்திற்கு நிகராக, பரபரப்பும் இருக்கும்.
ஒரே ஒரு ட்விட்.. மொத்தமும் க்ளோஸ்!
இதுநாள் வரை பேட்டிகள், அறிக்கைகள் வாயிலாக அறியப்பட்ட செல்லூர் ராஜூ, முதன்முறையாக, ஒரு ட்விட் போட்டு, ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தை, ஏன்.. இந்திய அரசியல் களத்தையும் பரபரப்பாக்கியிருக்கிறார். சம்மந்ததே இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார் செல்லூர் ராஜூ.
அப்படியென்றும் எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருப்பவர் இல்லை செல்லூர் ராஜூ. அப்படியிருக்க இது என்ன புது கலாட்டா என்று தான் காண்போர் அனைவருக்கும் தோன்றியது. காரணம், வீடியோவுக்கு அவர் எழுதியிருந்த கேப்ஷன் தான். ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் செல்லூர் ராஜூ!
‘எப்படி பார்த்தாலும் கணக்கு இடிக்குது’
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர், சம்மந்தமே இல்லாமல் ராகுல் காந்தியை திடீரென புகழ என்ன காரணம்? அதுவும் செல்லூரார் புகழ என்ன காரணம்? என்கிற குழப்பம் அதை ட்விட்டை பார்த்த ஒவ்வொருவருக்கும் தோன்றியது. காங்கிரஸ் கட்சி அதிமுக உடன் கூட்டணியில் இல்லை, இரு கட்சியும் பெரிய பரஸ்பரம் நட்பிலும் இல்லை, தமிழக காங்கிரஸ் கட்சியே அதிமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறது.
இப்படி இருக்க, எதற்காக இந்த வீடியோவையும், கேப்ஷனையும் செல்லூர் ராஜூ வெளியிட்டார் என்பது அவருக்கே வெளிச்சம். அவர் பதிவிட்ட மறுநொடியே, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர், ‘அண்ணே.. நன்றி..’ என, செல்லூர் ராஜூவின் ட்விட்டை ரீ ட்விட் செய்ததும் கவனிக்க வேண்டியது. இது ஒன்று போதாதா?
‘தூசு தட்டப்பட்ட தெர்மாகோல் மீம்ஸ’
தமிழகத்தில் தங்களின் பிரதான எதிர்கட்சியான திமுக உடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரை, செல்லூர் ராஜூ ஏன் புகழ வேண்டும்? இதற்கு அதிமுகவினர் பலரே, பயங்கர எதிர்வினை ஆற்றினார்கள். இதனால் சமூக வலைதளத்தில் மீண்டும் இடம் பிடித்தார் செல்லூர் ராஜூ. இரண்டு நாட்களாக ட்விட்டரை திறந்தாலே, செல்லூராரின் தெர்மாகோல் படங்கள் மீண்டும் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
இது கூட பரவாயில்லை, அவர் ட்விட் செய்தார், அதற்காக அவரை ட்ரோல் செய்கிறார்கள் ஓகே. சம்மந்தமே இல்லாமல், ராகுல் காந்தியின் முந்தைய வீடியோக்கள், போட்டோக்கள் என அவையும் செல்லூரார் உடன் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. சும்மா இருந்த ராகுலையும் தன் மீம் பார்ட்னராக இணைத்துவிட்டாரே என்று செல்லூரார் மீது சிலருக்கு கோபமும் இருக்கிறது.
டெலிட் செய்யப்பட்ட புகழார பதிவு
இருந்தாலும், பகுதி பகுதியாக பிரிந்து செல்லூராருக்கு எதிராக பாஜகவினர், அமமுகவினர், திமுகவினர் ஏன் சில அதிமுகவினரே கண்டன பதிவுகளை போடத் தொடங்கியிருக்கினார். தலைமையில் இருந்தும் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் தன்னுடைய ட்விட்டை திடீரென டெலிட் செய்திருக்கிறார் செல்லூர் ராஜூ. நேற்றைய நாளை பரபரப்பாக்கிய அந்த பதிவுகள் சிலவற்றை இப்போது உங்கள் பார்வைக்காக..
டாபிக்ஸ்