Nilgiris: நீலகிரியில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி! ரோட்டில் அமர்ந்த அண்ணாமலை! நீடிக்கும் பதற்றம்!
“தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும்…” என கூறி உள்ளார்”
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், வேட்புமனுத்தாக்கல் செய்ய பேரணியாக சென்ற பாஜகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
நீலகிரி தொகுதி
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடைபெற்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கம் முயன்றதால் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவினர் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணி செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் பேரணி செல்ல அனுமதி மறுத்தும், உரிய பாதுகாப்பு அளிக்காமல் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருடன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அக்கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் உதகை - கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தடியடிநடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும்…” என கூறி உள்ளார்.
காவல்துறை உடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர் தொண்டர்கள் முன் பேசிய அண்ணாமலை, “காவல்துறையில் அணிந்துள்ள காக்கிச்சட்டைக்கு ஒரு மரியாதை வேண்டும், நம்ம கட்சி காவல்துறையை மதிக்கவில்லை என்றால் வேறு எந்த கட்சி மதிக்கும். கூட்டம் அதிகமாக உள்ளது ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் காவல்துறை எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும். காவல்துறை கண்காணிப்பாளரை ரோட்டில் நிற்க வைத்து பேசுவதே தவறாக நினைக்கிறேன். பாஜக காவல்துறைக்கு எப்போதும் கண்ணியத்தை தரக் கூடிய கட்சி, இரண்டு கட்சி தொண்டர்களும் அடித்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். காவல்துறை என்னையே அடித்து இருந்தாலும் நான் இதைத்தான் பேசி இருப்பேன். நமது கட்சியில் லத்தி அடி வாங்கதா ஆட்களே இருக்க முடியாது. காவல்துறை மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன், நான் என் கடமையை செய்தேன் என காவல்துறை கண்காணிப்பாளர் சொன்னார். காயம்பட்ட நமது தொண்டர்களை நான் மருத்துவமனைக்கு செல்கிறேன்” என அண்ணாமலை கூறினார்.