வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி! 2 மாதம் கெடாது! டிபஃன் மற்றும் சாதத்துக்கும் ஏற்றது! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
Oct 21, 2024, 11:26 AM IST
வெங்கடேஷ்பட்டின் பருப்புப்பொடி, 2 மாதங்கள் வரை கெடாது. டிபஃன் மற்றும் சாதம் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பணிக்கு செல்வோர் இதை செய்து வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.
பருப்புப்பொடி, ஆந்திரா உணவுகளில் பிரபலம். ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடச் சென்றாலே சாம்பாருக்கும் முன் பருப்புப்பொடியையும் நெய்யையும் ஊற்றுவார்கள். இதை சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். சுவையும் நன்றாக இருக்கும். இந்த பருப்புப்பொடியை இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் போட்டு சாப்பிடலாம் என்பதால், இது இரண்டுக்கும் உதவக்கூடியது. உங்களின் வேலைகளை அதிகளவில் மிச்சப்படுத்தும். இந்த பருப்புப்பொடி இரண்டு மாதங்கள் வரை கெடாது. இதை செய்து வைத்துக்கொண்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். சில நாட்களில் உங்களால் சமைக்க முடியவில்லையென்றால், சாதம் மட்டுத் வடித்துவிட்டு, இந்த பருப்புப்பொடியை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மற்றும் ஊறுகாயே போதுமானது. இந்தப்பொடியை செய்வதும் எளிதுதான். சுவையானதும், ஆரோக்கியமானதும் என்பதால், இந்த பருப்புப்பொடி உங்களுக்கு பல வகைகளில் உதவக்கூடியது. இந்த பருப்புப்பொடியை செஃப் வெங்கடேஷ் பட்டின் முறையில் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
பொட்டுக்கடலை – 50 கிராம்
பூண்டு – 100 கிராம்
சீரகம் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
மிளகாய் – 20 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மேலும் நீள மிளகாய் மற்றும் குண்டு மிளகாய் என கலந்து எடுத்துக்கொள்வது நல்லது அல்லது நீங்கள் தனித்தனியாக ஒரே மிளகாயைக் கூட எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்)
கல் உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
வெல்லம் – 30 கிராம்
பெருங்காயத்தூள் – 30 கிராம்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை என் அனைத்தையும் சேர்த்து தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. நன்றாக வறுத்துவிடவேண்டும்.
அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுத்துக்கவேண்டும். இல்லாவிட்டால் அது கருகிவிடும். வறுக்கும்போது ஒவ்வொன்றையும் கை எடுக்காமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கிளறுவதை விட்டு கையை எடுத்துவிட்டால், கருகிவிடும். எனவே வறுப்பதில் மிகவும் கவனம் தேவை.
பெருங்காயத்தை மட்டும் கட்டியாக இருந்தால், சிறிது நல்லெண்ணெயை சேர்தது வறுத்துக்கொள்ளவேண்டும். பொடி எடுத்தீர்கள் என்றால் அடுப்பை அணைத்துவிட்டு, கடாயின் சூட்டிலே வறுத்துவிடவேண்டும். ஏனெனில் பெருங்காயத்தூள் விரைவில் கருகிவிடும் மெல்லிய தன்மை கொண்டது. எனவே பெருங்காயத்தூளை வறுப்பதில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும். ஆறியபின், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது வெல்லைத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தை வறுக்கும்போதோ அல்லது சூட்டுடனோ சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வெல்லம் உருகிவிடும்.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, ஃபிரிட்டிஜில் வைத்துவிட்டால் போதும். இரண்டு மாதங்கள் வரை கெடாது. உங்களுக்கு தேவையான அளவு அவ்வப்போது சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். சாதத்துடன் மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் ஏற்றது. இது அவசரத்துக்கு உதவக்கூடியது என்பதால், குறிப்பாக பணி செல்லும் பெண்களுக்கு ஏற்றது.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்