தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vendaikai Mor Kulambu : வழக்கமான சாம்பார் போர் அடிக்கும்போது வித்யாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யலாம்!

Vendaikai Mor Kulambu : வழக்கமான சாம்பார் போர் அடிக்கும்போது வித்யாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யலாம்!

Priyadarshini R HT Tamil

Sep 13, 2024, 10:04 AM IST

google News
Vendaikai Mor Kulambu : வழக்கமான சாம்பார் போர் அடிக்கும்போது வித்யாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யலாம்!
Vendaikai Mor Kulambu : வழக்கமான சாம்பார் போர் அடிக்கும்போது வித்யாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யலாம்!

Vendaikai Mor Kulambu : வழக்கமான சாம்பார் போர் அடிக்கும்போது வித்யாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யலாம்!

பொதுவாக நம் வீடுகளில் முன்னோர்கள், வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால் கணக்கு நன்றாக போடுவீர்கள் என்று கூறி நம்மை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் காய்களுள் ஒன்றாக வெண்டைக்காய் இருக்கும். இந்தியில் பிண்டி, ஓக்ரா, ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர், பெண்களின விரல்களைப்போல் மென்மையாகவும், இளமையாகவும் இருப்பதால் இதற்கு இந்தப்பெயர். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது இந்த வெண்டைக்காய். உலகின் பல்வேறு நாடுகளில் விளைகிறது. இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் காய்களுள் ஒன்று இந்த வெண்டைக்காய். எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது இந்த வெண்டைக்காய். இதைப் பயன்படுத்தி சாம்பார், வறுவல், பொரியல் என பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது. வெண்டைக்காயில் மோர் குழம்பு செய்வது எப்படி எனப்பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு கப்

வெண்டைக்காய் – 150 கிராம்

தக்காளி – அரைப்பழம்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மசாலா அரைக்க

துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்

பச்சரிசி – ஒரு ஸ்பூன்

இஞ்சி – ஒரு இன்ச்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

தேங்காய் – அரை கப் (துருவியது)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 2

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்வது எப்படி?

அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். தயிரை சம அளவு நீர் சேர்த்து கையில் அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெண்டைக்காயை கழுவி, ஃபேனில் சிறிது நேரம் காய வைத்து நறுக்கிக்கொள்ளவேண்டும். வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை அப்போது இருக்காது. வெண்டைக்காயை எதற்கு சமைத்தாலும் அலசி காய வைத்து பயன்படுத்தவேண்டும். தக்காளியையும் சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை வதக்கவேண்டும். வெண்டைக்காய் வதங்கியவுடன் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தக்காளியில் இருந்து தோலை நீக்கிவிட்டு, அரைத்த கலவையில் சிறிது தண்ணீர் கலந்து வதக்கிய காயுடன் சேர்த்துக்கிளறவேண்டும்.

கொதித்து வரும்போது, அடித்த மோரை சேர்க்கவேண்டும். ஒன்றாக கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவேண்டும். மோர் சேர்த்து நீண்ட நேரம் கொதிக்கவிடக்கூடாது.

ஒரு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து சூடான சாதத்தில் பரிமாற சுவை அள்ளும். இதை பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மோர் குழம்பு சாதத்துக்கு உருளைக்கிழங்கு வறுவல் சிறந்த ஜோடி.

இந்த மோர் குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். வெண்டக்காய்க்கு பதில் பூசணிக்காய், வெள்ளரிக்காய் சேர்த்தும் மோர் குழம்பு செய்யலாம்.

வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் வெண்டைக்காயில் 7.03 கிராம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 9 சதவீதம் நார்ச்சத்துக்களும் உள்ளது. இதில் ஃபோலேட், நியாசின், வைட்டமின் சி, இ, கே ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் கால்சியம், காப்பர், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்துள்ளன.

வெண்டைக்காயின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

சர்க்கரை நோயாளிகள், வெண்டைக்காயை வெட்டி தண்ணீரில் ஓரிரவு ஊறவைத்து, அந்த தண்ணீரை அடுத்த நாள் பருகினால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். மேலும் பச்சையாக உட்கொள்ளக்கூடிய காய்களுள் ஒன்று வெண்டைக்காய்.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

அனீமியாவைத் தடுக்கிறது.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது.

குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

குறிப்புகள்

வெண்டைக்காயை வாங்கும்போது, அதன் பின்புறம் கிள்ளி, இளம் வெண்டைக்காய்களாக மட்டுமே வாங்கவேண்டும்.

இதை வறுத்து சாப்பிடும்போது உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே வேகவைத்து சாப்பிடவேண்டும்.

இது சாம்பார், சூப், குடைமிளகாயுடன் வறுவல் என பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகிறது.

வெண்டைக்காயை வேகவைக்கும் முன் அதை எண்ணெயில் வறுக்கவேண்டும். அப்போதுதான் அதன் பிசுபிசுப்புத்தன்மை குறையும்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி