காய்கறியில் செய்யப்படும் பால் குழம்பு; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! மீண்டும் வேண்டும் என்பீர்கள்!
Nov 09, 2024, 09:56 AM IST
காய்கறியில் செய்யப்படும் பால் குழம்பு, இது தேங்காய்ப்பாலில் செய்யப்படுகிறது. சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது. மீண்டும் வேண்டும் என்று கேட்கத்தூண்டும்.
காய்கறி பால் குழம்பு செய்வதற்கு அனைத்து காய்கறிகளும் பயன்படுத்தப்படும் என்பதால் இது ஒரு ஆரோக்கியம் நிறைந்த ரெசிபியாக உள்ளது. இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இது பால் குழம்பு என்பதால், பசும்பாலில் செய்யப்படுவதில்லை. இதற்கு தேங்காய்ப்பால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேங்காய்ப்பாலை மட்டும் வைத்துக்கொள்ள தேவையில்லை. தேங்காய்ப்பால் மற்றும் பசும் பால் இரண்டையும் கலந்தும் செய்யலாம் அல்லது முற்றிலும் தேங்காய்ப் பாலிலும் செய்யலாம். இது சாதத்தைவிட டிஃபனுக்கு நல்ல சைட்டிஷ். ஆனால் சாதத்துடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் எளிதுதான். இதில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் மட்டுமின்றி, கூடுதலாக காய்கறிகளையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். அதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் இடம்பெறட்டும்.
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
காலிஃப்ளவர் துண்டுகள் – ஒரு கப்
தேங்காய் – 1
பட்டை – 1
கிராம்பு – 4
ஸ்டார் சோம்பு – 1
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 1
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
(தேங்காய் எண்ணெய் சிறந்தது)
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி – ஒரு கப்
நூல்கோல் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் தேங்காயைத் துருவி இருமுறை பால் எடுத்து இரண்டையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவது தேங்காய்ப்பாலில், பொடியாக நறுக்கிய அனைத்து காய்கறிகள், பச்சை மிளகாய், மிளகாய் மற்றும் மல்லித்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்தவுடன், அவற்றை லேசாக மசித்துக்கொள்ளவேண்டும்.
மசித்த காய்கறிகளுடன் கெட்டியான தேங்காய்ப் பால், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் வேகவிடவேண்டும்.
தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகிய முழு கரம் மசாலாவை சேர்த்து அது நன்றாக பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.
இந்த தாளிப்பை குழம்பில் சேர்த்து, மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான காய்கறி பால் குழம்பு தயார். இது காய்கறி பால் குருமா, காய்கறி ஸ்ட்டூ என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இதை இட்லி, தோசை, பூரி, ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், ஆப்பம், உப்புமா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்திலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதில் காரம் குறைவாகவே இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும். இது தேங்காய்ப்பாலிலே வேகவைப்பதால், வித்யாசமான சுவை கொண்டதாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்