தேங்காய்ப்பாலுடன் சேர்த்து சமைக்கப்படும் சிவப்பரிசி கஞ்சி; எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு!
தேங்காய்ப்பாலுடன் சேர்த்து சமைக்கப்படும் சிவப்பரிசி கஞ்சி; எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு!
சிவப்பரிசியின் நன்மைகள்
ஆந்தோசயனின் என்ற நிறமி இந்த அரிசி மற்றும் அவலின் சிவப்பு நிறத்துக்கு காரணமாகின்றன. சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், சிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி சிறந்தது. காரணம் பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து இது தயார் செய்யப்படுவதால்தான். இவற்றை எடுத்துக்கொண்டால், நீண்ட நேரத்திற்கு பசிக்காது, உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், பசியை போக்கும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையை பேண உதவுகிறது. எனவே எடைக்குறைப்பு பயணத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. மூளை செல்களை புத்துணர்ச்சியாக்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும். வாய்ப்புண்ணை குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 மில்லி லிட்டர் தேங்காய் பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதச்சத்துக்களும், 16.9 கிராம் கொழுப்பும், 14.6 சாச்சுரேடட் கொழுப்பும், 3.3 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் சர்க்கரையும் உள்ளது.
தேங்காய்ப்பால் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவு. வயிற்றில் உள்ள அல்சரை குணப்படுத்த உதவுகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் இதில் கிடையாது என்பதால், பாலுக்கு பதில் இதை பயன்படுத்தலாம். சைவ உணவுப்பிரியர்களுக்கு ஏற்றது. இதில் அலர்ஜி, பூஞ்ஜை மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
சிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி செய்வது எப்படி என்று தெரிந்துககொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - ஒரு கப்
முதல் தேங்காய்ப் பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒரு கப்
மூன்றாம் தேங்காய்ப்பால் – ஒரு கப்
பூண்டு - 15 பல்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
சுக்கு – ஒரு இன்ச்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவேண்டும். இதை 4 விசில் விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை இறக்கி அந்த சூட்டிலே முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவேண்டும். இந்த கஞ்சியை பருகினால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் சரியாகும். உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடிய கஞ்சியாகும். ‘
இந்த கஞ்சியை சிவப்பரிசி அவலிலும் செய்யமுடியும். அதற்கு நீங்கள் சிவப்பரிசி அவலை குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டாம். சாதாரண பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொண்டாலே போதும்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்