Raw Mango Pickle : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல்! திருமண விருந்து பச்சை மாங்காய் ஊறுகாய்! வாயில் எச்சில் ஊறுகிறதா?
Jun 10, 2024, 09:57 AM IST
Raw Mango Pickle : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல், திருமண விருந்து பச்சை மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? வாயில் எச்சில் ஊறுகிறதா?
திருமண விருந்துகளில் பரிமாறப்படும் பச்சை மாங்காய் ஊறுகாயை, அந்த விருந்துடன் சேர்த்து சாப்பிடும்போது அது அத்தனை சுவையானதாக இருக்கும்.
அந்தப்பச்சை மாங்காய் ஊறுகாயை இன்ஸ்டன்ட்டாக செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
ஆனால் இந்த ஊறுகாயை நீங்கள் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது செய்துகொள்ளவேண்டும். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்பவரின் ரெசிபிகள் பிரபலமாகி வருகிறது. அவரின் ஸ்டைலில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாங்காயை சமைக்கத்தேவையில்லை. மிளகாய்ப்பொடி, உப்பு, கடுகு, நல்லெண்ணெய் சேர்த்து எளிதாக 5 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் – 1 (நன்றாக விளைந்ததை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன் (உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)
உப்பு – தேவையான அளவு
நலலெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் மாங்காயை மிகப்பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, கிள்ளிய வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து மாங்காய் ஊறுகாயில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
சூப்பர் சுவையில் அள்ளிஅள்ளி சாப்பிடத்தூண்டும் பச்சை மாங்காய் ஊறுகாய் தயார். இது சாம்பார், ரசம், மோர் என அனைத்து சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
கல்யாணி விருந்தில் எத்தனை சைட்டிஷ்கள் இருந்தாலும், இந்த ஊறுகாய் தரும் நிறைவை வேறு எதுவும் கொடுக்காது. பாயாசத்தை சாப்பிட்டுவிட்டு, கடைசியாக தண்ணீர் மோர் சேர்த்து இந்த மாங்காய் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட, அந்த விருந்தே அப்போதுதான் முழுமைபெறும்.
அந்த அனுபவத்தை வீட்டில் பெறவேண்டுமெனில், நீங்கள் இந்த சுவையான ஊறுகாயை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், தேவையான அளவு மட்டுமே செய்துகொள்ளுங்கள். அதிகம் வேண்டாம். குறிப்பாக இது மாங்காய் சீசன். எனவே இப்போது கட்டாயம் செய்யலாம்.
மாங்காயின் நன்மைகள்
உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.
மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.
இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.
மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.
மாங்காய் இத்தனை நன்மைகள் நிறைந்ததுதான். ஆனால், அதை அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் சாப்பிட்டால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். எனவே மாங்காயை சாப்பிடும்போது கவனம் தேவை.
டாபிக்ஸ்