Morning Quotes : கலோரிகள் குறைவு! ஊட்டச்சத்துக்கள் நிறைவு! இதோ இந்த காலை உணவுகளே சிறந்தது!
Aug 16, 2024, 07:24 AM IST
Morning Quotes : கலோரிகள் குறைந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காலை உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் நாளே ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.
காலை உணவுதான் ஒரு நாளின் முக்கிய உணவாகும். ஒரு நாளுக்கு தேவையான மொத்த ஆற்றலையும் காலை உணவே கொடுக்கிறது. எனவே காலை உணவை தவிர்க்காமல் இருப்பது மிகவும் அவசியம்.
காலை உணவை நீங்கள் உட்கொள்ளும்போது, அவை எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும். கலோரிகள் அதிகம் கொண்டதாக இருக்கக்கூடாது. அதுபோன்ற கலோரிகள் குறைவான காலை உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நாளை சிறப்பானதாக்க உதவும் காலை உணவுகள் இங்கு வரிசை கட்டுகின்றன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு சாப்பிட்டு பலன்பெறுங்கள்.
முளைக்கட்டிய தானியங்கள் சாலட்
முளைகட்டிய தானியங்கள் சாலட், உங்களுக்கு புத்துணர்வை தரக்கூடியது. சாப்பிட மொறு மொறு சுவையானது. முளைக்கட்டிய தானியங்கள் சாலட்டில் பருப்புகள், கொட்டைகள் மற்றும் காய்கறிகள் என சேர்த்து சுவையானதும், உங்கள் நாளை சிறப்பாக்கவும் உதவும்.
ராகி மால்ட்
ராகி மாவை பாலில் கலந்துகொள்ள வேண்டும். அதை அடுப்பில் வைத்து காய்ச்சிக்கொள்ளவேண்டும். அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு தயார்.
டோக்லா
குஜராத்தின் காலை உணவு, கடலை மாவை புளிக்க வைத்து தயாரிக்கப்படும் கலோரிகள் குறைவான காலை உணவு. கடலை மாவில் சோடா உப்பு சிறிது சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொண்டு, ஆவியில் வைத்து கேக்போல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதை கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து அந்த இனிப்பு மற்றும் காரம் சேர்ந்த சிரப்பை மேலே ஊற்றினால் சுவையான டோக்லா தயார். இதற்கு புதினா சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
முட்டையின் வெள்ளை கரு
வேகவைத்த முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால் போதும், இதில் புரதச்சத்துக்கள் அதினம், கலோரிகள் குறைவு. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கான சிறந்த தேர்வு.
அவல்
எளிதாக செய்யக்கூடிய இந்திய காலை உணவு. அவலை சூடான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து வடித்து, வெங்காயம், கேரட், கடலை தாளித்து சேர்த்து கலந்து பரிமாறினால், சூப்பரான அவல் தயார். இதை வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து இனிப்பாகவும் பரிமாறலாம்.
ரவா இட்லி
ரவா இட்லியும் செய்வது எளிது, இட்லி மாவில் கொஞ்சம் ரவையை சேர்த்து இரவே புளிக்கவைத்துவிடவேண்டும். காலையில் அதில் இஞ்சி, கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் தாளிப்பு கொடுத்துவிடவேண்டும். துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் தாளித்து சேர்த்து, இட்லிகளாக வார்த்தெடுத்தால், சூப்பரான காலை உணவு தயார்.
வெள்ளரி தயிர் பச்சடி
வெள்ளரிக்காயை துருவி, தயிரில் சேர்த்து பச்சடி செய்து, அதில் கடுகு, உளுந்து, பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து தாளித்து கொட்டினால், வயிறுக்கு குளுமை தரும், செரிமானத்துக்கு உதவும் ஒரு சுவையான காலை உணவு தயார்.
உப்புமா
சம்பா ரவையில், பீன்ஸ், கேரட், பெரிய வெங்காயம், தாளிப்புடன் சேர்த்து செய்யும் சுவையான உப்புமா. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. கலோரிகள் குறைந்தது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கும்.