Moong Dal Masala Poori : இது புது வகை பூரி! பாசிப்பருப்பு மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்வது! எனர்ஜி நிறைந்த காலை உணவு!
Sep 02, 2024, 10:56 AM IST
Moong Dal Masala Poori : இது புது வகை பூரி, பாசிப்பருப்பு மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்வது. எனர்ஜி நிறைந்த காலை உணவாக இது உள்ளது. இதை கட்டாயம் செய்து சாப்பிடக் கொடுங்கள்.
பாசிப்பருப்பு பூரி செய்ய கற்றுக்கொள்வதற்கு முன் பாசிபருப்பின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்களை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். 100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.
பாசிப்பருப்பு பூரி செய்ய தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – அரை கப்
கோதுமை மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
கசூரி மேத்தி – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பூரி பொரித்து எடுக்க தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து அதை நன்றாக அலசிவிட்டு, தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி அனைத்தும் சேர்த்து போதிய அளவு உப்பு மற்றும் தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
மசாலாப் பொருட்கள் அனைத்தும் மாவின் அனைத்து புறங்களிலும் படும் அளவுக்கு நன்றாக கலந்து மாவை பிசையவேண்டும். கடைசியாக சிறிது எண்ணெய் சேர்த்து மூடி அரை மணி நேரம் ஊறவைகக்வேண்டும்.
பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் வைத்து, கொஞ்சம் மொத்தமாக தேய்த்துக்கொள்ளவேண்டும். சப்பாத்திக்குதான் மெல்லிசாக தேய்க்கவேண்டும். பூரிக்கு சிறிது மொத்தமாக தேய்ப்பதுதான் நல்லது.
எண்ணெயை சூடாக்கி தேய்த்து வைத்த மாவைப்போட்டு பொரித்து பூரிக்களாக எடுக்கவேண்டும். பூரிகள் இருபுறமும் நன்றாக வெந்தவுடன், அதை எண்ணெயில் இருந்து வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு தொட்டுக்கொள்ள பன்னீர், காய்கறி மசாலா அல்லது மட்டன், சிக்கன் என அசைவ குருமாக்களும் தயார் செய்துகொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும் பாசிப்பருப்பு பூரி சாப்பிடும்போது வித்யாசமான உணர்வைத்தரும்.
இதில் 70 கலோரிகள், கார்போஹைட்ரேட் 14 கிராம், புரதம் 3 கிராம், கொழுப்பு 1 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு 1 கிராம், சோடியம் 4 மில்லி கிராம், பொட்டாசியம் 19 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 1 கிராம், சர்க்கரை 1 கிராம், வைட்டமின் ஏ, கால்சியம் 4 மில்லி கிராம், இரும்புச்சத்து 1 மில்லி கிராம் உள்ளது. காலையில் இதை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். மேலும் இந்த பூரிக்கு நீங்கள் தொட்டுக்கொள்ளும் சப்ஜியினி அளவைப் பொறுத்தும் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு மாறுபடும்.
டாபிக்ஸ்