Fresh Masala Chicken Fry : காரசாரமான சிக்கன் ஃப்ரை; மசாலா ஃபிரஷ்ஷாக அரைத்து செய்வது எப்படி என்று பாருங்கள்!
Sep 02, 2024, 10:03 AM IST
Fresh Masala Chicken Fry : காரசாரமான சிக்கன் ஃப்ரை, மசாலா ஃபிரஷ்ஷாக அரைத்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். சுவையில் அள்ளும்.
இந்த ரெசிபியை தெரிந்துகொள்வதற்கு முன் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துகொள்வது அவசியம். சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள். இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது. சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் ஏற்படாது. எனவே, 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகு – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 4
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
வரமல்லி – ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
சோம்பு – அரை ஸ்பூன்
சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – கால் கப்
பெரிய வெங்காயம் – 1 (சிறிய சதுரங்களாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் கீறியது)
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மிளகு, வர மிளகாய், பட்டை, கிராம்பு, வரமல்லி, சின்ன வெங்காயம், சோம்பு என மசாலா அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
நன்றாக கழுவி எடுத்த அரை கிலோ சிக்கனில் கொரகொரப்பாக அரைத்த இந்த மசாலாவை சேர்க்கவேண்டும். பின்னர் அதிலே மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரத்துக்குமேல் ஊறவைக்கவேண்டும்.
சிக்கன் நன்றாக ஊறியவுடன் அதை கடாயில் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். மூடிவைத்து தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்து வேகவைக்கவேண்டும். சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறும். ஊறவைக்கும்போதும் தண்ணீர் வெளியேற்றப்படும். எனவே வேகவைக்கும்போது கவனம் தேவை. அதிக தண்ணீர் சேர்த்தால் நன்றாக இருக்காது.
அதேபோல் மிளகாயின் அளவும் மிகவும் முக்கியம், ஏனெனில் இதில் வரமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி என அனைத்தும் சேர்க்கிறோம். காரம் வேண்டாம் என நினைப்பவர்கள் வரமிளகாய் அல்லது பச்சை மிளகாய் என எதை வேண்டுமானாலும் தவிர்த்துவிடலாம்.
சிக்கன் நன்றாக வெந்தவுன், அதில் சிறிய சதுர வடிவில் வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அவற்றை கிளறி வேகவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் எடுத்தால், சூப்பர் சுவையில் சிக்கன் ஃப்ரை தயார்.
இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த சிக்கன் ஃப்ரை இருக்கும். இதை செய்வது எளிது என்பதால், இதை அடிக்கடி செய்யலாம். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும் சுவையில் இருக்கும்.
டாபிக்ஸ்