தக்காளி இல்லாமல் ஒரு உணவா?.. தக்காளி நம்ம நாட்டோடது இல்ல.. உணவு வரலாறு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Dec 14, 2024, 06:00 AM IST
Tomatoes: இந்தியாவின் பிரதான உணவில் ஒன்றாக தக்காளி விளங்கி வருகிறது. இந்திய நாட்டின் சொத்தாக தக்காளி பார்க்கப்படுகிறது. ஆனால் தக்காளி நமது நாட்டைச் சேர்ந்தது கிடையாது என்பது இங்கு பலருக்கும் தெரியாது.
Tomato History: உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உணவு திகழ்ந்து வருகிறது. அந்த உணவிற்கு அன்றாட தேவையாக சில முக்கிய பொருட்கள் இருந்து வருகின்றன.
அதில் ஒன்றுதான் தக்காளி. இந்த தக்காளி இல்லாத சமையலையே தற்போது இந்திய நாட்டில் நாம் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவின் பிரதான உணவில் ஒன்றாக தக்காளி விளங்கி வருகிறது. இந்திய நாட்டின் சொத்தாக தக்காளி பார்க்கப்படுகிறது. ஆனால் தக்காளி நமது நாட்டைச் சேர்ந்தது கிடையாது என்பது இங்கு பலருக்கும் தெரியாது.
நாம் நம்முடைய நாட்டைச் சேர்ந்தது என்று நினைக்கக்கூடிய பல காய்கறிகள் நமது நாட்டைச் சேர்ந்தது கிடையாது. மத்திய அமெரிக்கா பகுதியான மெக்சிகோவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது தான் இந்த தக்காளி. முதலில் காட்டு செடி என நினைத்த மக்கள் அதனின் சுவை அறிந்து வீட்டில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
தக்காளியின் பிறப்பிடம்
இந்தியாவை தேடிச்சென்ற 15 ஆம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சேர்ந்தவர்கள் அமெரிக்க கண்டத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர். அப்போது மெக்ஸிகோ பகுதியில் புகுந்த போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மக்கள் பல உணவு பழக்கவழக்கங்களை தங்களிடம் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்றுதான் தக்காளி.
அதன் பின்னர் அருகில் இருக்கக்கூடிய இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த தக்காளியை ஏற்றுக்கொண்டனர். இதற்கு அவர்கள் கோல்டன் ஆப்பிள் என்ற பெயர் வைத்து அழைத்துள்ளனர். பிரெஞ்சுகாரர்கள் தக்காளியை மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளனர். குறிப்பாக அலங்காரம் செய்யக்கூடிய பொருளாகவும் இதனை பயன்படுத்தி உள்ளனர்.
அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த தக்காளி பரவத் தொடங்கியது. மீண்டும் அமெரிக்க நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்ற பிறகு அது நச்சுப்பழம் என பலரும் நினைத்து வந்தனர். நேரடியாக உணவுப் பொருட்களில் தக்காளி சேர்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. பிலிப்பைன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தோனேசிய பகுதிக்கு தக்காளியை எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் போர்ச்சுக்கல் வணிக மக்களால் இந்தியாவிற்கு வந்த தக்காளி வந்தது.
இந்தியாவில் நுழைந்த தக்காளி
போர்ச்சுகீசிய வணிகர்கள் தக்காளி மட்டும் இல்லாது மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் இந்தியாவிற்கு எடுத்து வந்தனர். இந்த தக்காளி பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவில் நுழைந்ததாக கூறப்படுகிறது. தக்காளி முதலில் வங்காள பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அங்கே பயிரிடப்பட்டு தக்காளி அன்றாட உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு நமது நாட்டிற்கு வந்த பிறகு பிரிட்டன் நாட்டிற்கு அதிக அளவில் தக்காளியை எடுத்துச் செல்வதற்காக இந்தியாவில் அதிக தக்காளி பயிர் செய்வதை ஊக்குவித்துள்ளனர்.
தக்காளி பயிரிட்டு வளர்வதற்கான ஏற்ற இயற்கை சூழ்நிலை நமது இந்திய நாட்டில் இருந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் விரைவாக நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டது.
அதன் பின்னர் நமது இந்தியாவில் அந்தந்த நிலத்திற்கு ஏற்ப சிறிய மாறுபடுகளோடு தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யப்பட்டது. நமக்கு ஒரு சில தக்காளிகளின் வகைகள் தான் தெரியும் ஆனால் தக்காளியில் 7500 வகைகள் உள்ளன. உணவில் சுவையை மேம்படுத்துவதற்காக தக்காளியை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் இந்தியாவில் தக்காளி இல்லாத உணவே கிடையாது என்ற அளவிற்கு தக்காளி இன்றியமையாத பொருளாக மாறியது. குறிப்பாக வட இந்தியாவில் உணவுகளில் சேர்க்கப்படும் அடிப்படை காரணியாக தக்காளி பார்க்கப்பட்டு வருகிறது. புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தக்காளி வருவதற்கு முன்பு மாங்காய், புளி, எலுமிச்சை உள்ளிட்டவைகளை வைத்து புளிப்பு சுவையை உணவில் பயன்படுத்தியுள்ளனர். தற்போது தக்காளியில்லாமல் எந்த உணவையும் சமைக்க முடியாது என்ற நிலை நமது இந்திய மக்களிடையே இருந்து வருகிறது.